திருப்பதிக்கு செல்ல தனுஷால் தடையா.. பொங்கிய பக்தர்கள்..! தேசிய விருது இயக்குனருக்கு எதிர்ப்பு

0 1066

நடிகர் தனுஷ் படத்தின் படப்பிடிப்பிற்காக திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களின் வாகனங்களை வேறு பாதையில் போலீசார் திருப்பிவிட்டதால், வழி தெரியாமல் அவதிக்குள்ளான பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

தெலுங்கில் தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா... இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பல லட்சம் ரூபாய் பணம் செலித்தி, திருப்பதி மலையடிவாரத்தில் 2 நாட்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு படப்பிடிப்பு துவங்கியது.

படப்பிடிப்பிற்கு தடை ஏதும் ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் போலீசார் திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்துகள், பக்தர்களின் வாகனங்கள் ஆகியவற்றை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பி விட்டனர்.

போக்குவரத்தை மடைமாற்றும் பணியில் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த பவுன்சர்களும் ஈடுபட்டனர். மிகவும் குறுகலான ஹரே ராம ஹரே கிருஷ்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் திருப்பதியில் சினிமா படப்பிடிப்பு ஒன்றுக்காக பக்தர்களின் வாகன போக்குவரத்தை மடை மாற்றி நெரிசலை ஏற்படுத்தி காத்திருக்க வைத்ததால், பக்தர்கள்,பொது மக்கள் உரிய நேரத்துக்கு தரிசனத்துக்கு செல்ல இயலாமல் தவித்தனர்.

தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய போலீஸாரின் நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, படப்பிடிப்பு குழுவினரோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்

காலை 10 மணி வரை படப்பிடிப்பு நீடித்ததால் பக்தர்கள் கடும் கொந்தளிப்படைந்தனர். இதையடுத்து போலீசார் அலிப்பிரி பாதை வழியாக வாகன போக்குவரத்தை மீண்டும் அனுமதித்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் அதிகாலை தரிசனத்துக்கு செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானதாக வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று நிறுத்தப்பட்ட படப்பிடிப்பை நாளை தொடர இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இதற்கிடையே பா.ஜ.க மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து தனுஷ் படத்தின் படப்பிடிப்புக்கான அனுமதியை ரத்து செய்வதாக எஸ்.பி .பரமேஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments