ஆளுக்கு 99 ரூபாய் அனுப்பினர் சில்லாங்கிலிருந்து விமானத்தில் வந்த லாரி ஓட்டுனர் உடல்..! இ - வாகன் வாட்ஸ் அப் குழு அபாரம்
மேகாலயாவின் சில்லாங் பகுதியில் லாரி உருண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியான ஓட்டுனரின் உடலை இ வாகன் சேவை என்ற அமைப்பினர் வாட்ஸ் அப் குழு மூலம் ஆளுக்கு 99 ரூபாய் செலுத்தி, விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
கணவனின் முகத்தை காணவேண்டும் என்ற மனைவியின் ஆசையை நிறைவேற்றிய மனித நேயம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
கணவரின் மரண செய்தி அறிந்து... இரு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, எப்படியாவது கணவரை இங்கே கொண்டு வந்து விடுங்காள் என்று மனைவி பதறும் சோக காட்சிகள் தான் இவை..!
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தாமரைகோலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் பன்னாரி அம்மன் லாரி சர்வீஸில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார்.
பிரியதர்ஷினி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ள நிலையில் கடந்த 24ந்தேதி சென்னையில் இருந்து மேகாலயாவின் சில்லாங் மலைபிரதேசத்துக்கு கண்ணாடி பாரம் ஏற்றிச்சென்றார்.
அங்குள்ள இறக்கத்தில் பிரேக் பிடிக்காமல் குடியிருப்பு பகுதிக்குள் உருண்ட லாரி உடைந்து நொறுங்கியதால் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் பெருமாள் காயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வீடுகள் சேதம் அடைந்ததால் அங்குள்ள மக்கள் ஓட்டுனரின் சடலத்தை எடுக்க விடவில்லை.
இதனால் மணிகண்டனின் சடலத்தை மீட்பதில் போலீசாருக்கே சவாலாக இருந்தது.
இந்த நிலையில் லாரி போனால் பரவாயில்லை ஓட்டுனர் மணிகண்டனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுங்கள் என்று வீடியோ வெளியிட்ட லாரி உரிமையாளர், தான் கடனில் தவிப்பதால் தன்னிடம் பணம் இல்லை என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேஷ்குமார், தனது இ வாகன் சேவை என்ற செயலி மற்றும் எதிர்நீச்சல் வாட்ஸ் அப் குழுவில் ஆளுக்கு 99 ரூபாய் வீதம் பணம் செலுத்தினால் ஓட்டுனரின் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்து விடலாம் என்று யோசனை கூறினார்
சாலையில் நின்று கை நீட்டுவோருக்கே.. தயங்காமல் அள்ளிக்கொடுக்கும் லாரி ஓட்டுனர்கள் தங்கள் சக ஓட்டுனர் ஒருவன் உயிரிழந்து கிடக்கும் தகவல் அறிந்து ஆளுக்கு 99 ரூபாயை விரைவாக செலுத்தினர்.
ஒரு பக்கம் பணம் சேர்ந்து கொண்டிருக்க மறுபக்கம் கணேஷ்குமார் , சில்லாங் போலீஸ் எஸ்.பி ஜெஃபிரி சுடிங் என்பவருடன் பேசி, மணிகண்டனின் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிணகூறாய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உதவினார்.
இறந்தவரின் உறவினர் கையெழுத்து இருந்தால் தான் பிணகூறாய்வு செய்யமுடியும் என்ற நிலை உருவானபோது கிளீனர் பெருமாள் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் 9 வகையான சான்றிதழ்களை சேகரித்து மெயில் மூலம் வழங்கி மணிகண்டனின் உடலை என்பார்மிங் செய்து , மரப்பாக்ஸில் அடைத்து விமானம் மூலம் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவுகாத்தி விமான நிலையம் கொண்டு சென்றனர்.
26ந்தேதி இரவு 9:20 மணிக்கு இண்டிகோ விமானம் புறபட இருந்த நிலையில் 8:30க்கு பாக்ஸில் மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்த போது அலாரம் ஒலித்ததால் பாக்ஸை தடுத்து நிறுத்தினர்.
உறவினர்களிடம் விசாரித்த போது 6 மாதத்திற்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் மணிகண்டனின் காலில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான தகவலை சில்லாங் டி.ஐ.ஜி டேவிஸ் மார்க்கிடம் தெரிவிக்க , அவர் கவுகாத்தி அதிகாரிகளிடம் பேசி மணிகண்டனின் உடலை விமானத்தில் ஏற்ற ஏற்பாடு செய்தார்.
அந்த விமானத்தில் கிளீனர் பெருமாளும் கொல்கத்தா வந்தார் .
அங்கிருந்து காலை 5 மணிக்கு பெங்களூரு விமானத்தில் புறப்பட இருந்த நிலையில் 1 மணி அளவில் மீண்டும் சோதனை .. மீண்டும் பாக்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது.
மதுரையை சேர்ந்த ஹரி என்பவர் இண்டிகோ நிறுவன அதிகாரிகளிடம் நிலமையை எடுத்துச்சொல்லி அங்கிருந்து உடல் பெங்களூரு வந்து சேர உதவினார்.
அங்கிருந்து இ - வாகன் சேவை உறுப்பினர் சிவாஜிராவ், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று, பிரியதர்ஷினியிடம் மணிகண்டனின் உடலை ஒப்படைத்தார் .
இறுதி சடங்கிற்க்கு பின்னர் மணிகண்டனின் உடல் நல்அடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் ராணுவ அதிகாரியின் மகனான கணேஷ்குமாருக்கு தமிழ், இந்தி , ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் அத்துப்படி என்பதால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பிரச்சனையை வெளி மாநில அதிகாரிகளுடன் எடுத்துக்கூறி தனது குழுவினருடன் சேர்ந்து மனித நேயத்துடன் உதவிக்காரம் நீட்டி வருகிறார்.
முன்னதாக உடல்கூறாய்வை விரைந்து முடித்து தருவதாக 3 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற , சில்லாங் உதவி ஆய்வாளர் ஒருவர் , இவர்களின் உதவும் குணத்தை பார்த்து நெகிழ்ந்து போய் மீண்டும் கணேஷ்குமாருக்கே பணத்தை திருப்பி அனுப்பியது குறிப்பிடதக்கது.
Comments