அப்போ விஜய்க்கு 13 வயசு.! அறிவுரை சொல்லி அனுப்பினேன்.. அவரை போட்டின்னா மரியாதை இல்ல. அரங்கை அதிரவிட்ட லால் சலாம் ரஜினி

0 1498

லால் சலாம் படவிழாவில் பேசிய  நடிகர் ரஜினிகாந்த், தான் கூறிய காக்கா கழுகு கதை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகவும், என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன் விஜய் என்று கூறியதோடு, அவரை தனக்கு போட்டியாக ரசிகர்கள் நினைத்தால் அது தனக்கு மரியாதையும் அல்ல, கவுரவமும் அல்ல என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்..

லால்சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், சில மாதங்களாக நீட்டித்து வந்த காக்கா கழுகு கதை தொடர்பாக ரஜினி-விஜய் ரசிகர்கள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..

விழாவில் பேசிய ரஜினிகாந்த், தான் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிய காக்கா - கழுகு கதை சமூக வலைதளங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, நான் விஜய்யை பற்றி கூறியதாக பரப்பப்பட்டது அது எனக்கு வருத்தத்தை அளிக்கின்றது. விஜய் தனது கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பையன் என்றார்.

தான் தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் இருந்த போது 13 வயது பைனாக விஜய் அங்கு வந்திருந்ததாகவும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை அறிமுகம் செய்து வைத்து பையன் இப்பவே நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதாகவும், நன்றாக படிக்கும்படி அறிவுரை கூற சொன்னதாகவும், அதற்கு, நன்றாக படிப்பா என்று தான் அறிவுரை கூறி விஜய்யை அனுப்பி வைத்ததை ரஜினி நினைவுகூர்ந்தார். இப்போது விஜய் தனது நடிப்புத்திறமையாலும் கடுமையான உழைப்பாலும் உயர்ந்து பெரிய உயரத்தில் இருப்பதாகவும் அடுத்து அரசியல் மற்றும் சமூக சேவையில் ஈடுபட இருப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.

இந்த நிலையில் தனக்கும் விஜய்க்கும் போட்டி என்று கூறுவது தனது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாக கூறிய ரஜினிகாந்த், விஜய்யே சொல்லி இருக்கார், தனக்கு போட்டி தான் தான் என்றும், நானே சொல்லி இருக்கிறேன் எனக்கு போட்டி எனது படங்கள் தான் என்றும் கூறி இருப்பதை ரஜினி காந்த் சுட்டிக்காட்டினார்.

மேலும் எனக்கு போட்டியாக விஜய்யை நினச்சா அது தனக்கு மரியாதையும் அல்ல, கவுரவமும் அல்ல என்றும், அதே போல அவருக்கு போட்டியாக என்னை நினைத்தால் அது அவருக்கு மரியாதையும் கவுரவமும் அல்ல என்று கூறிய ரஜினிகாந்த், வரும்காலங்களில் ரசிகர்கள் இனி இது போன்ற காரணங்களுக்காக சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக பேசிய லால்சலாம் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா, சிலர் சமூகவலைதளங்களில் தனது தந்தையை குறிப்பிட்ட வார்த்தையை சொல்லி விமர்சிப்பதாகவும், அவர் சங்கி இல்லைங்க... ரஜினி ஒரு மனிதநேயவாதி என்றார். ஒரு சங்கியால் லால் சலாம் படம் பண்ண முடியாது என்றும், ரஜினி ரசிகன் பெருமைபடுற மாதிரி இந்த படம் இருக்கும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments