ரெட்டையாக காட்டுக்குள் போய் ஒற்றையாக பைக்கில் வீட்டிற்கு திரும்பிய காதல் கணவன்..! சிசிடிவியால் துப்பு துலங்கியது

0 1574

சாத்தான்குளம் அருகே காதல் மனைவியை பைக்கில் அழைத்துச்சென்று தேரிக்காட்டுக்குள் வைத்து கொலை செய்த கணவன் வீட்டிற்கு திரும்பி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

சாத்தான்குளம் அருகே உள்ள இடச்சிவிளை எம்.எல்.தேரிகாட்டு பகுதியில் துப்பட்டாவல் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சுடிதார் அணிந்த பெண்ணை பைக்கில் காட்டுக்குள் அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர் சிறிது நேரம் கழித்து தனியாக அதிவேகத்தில் திரும்பிச்செல்வதை கண்டுபிடித்தனர்.

இருசக்கர வாகன பதிவெண்ணை வைத்து துப்பு துலக்கிய போலீசார், பைக்கில் தப்பியவர் கூவன்கிணறு பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் என்பதையும், அவர் சாதி மறுப்பு திருமணம் செய்த தனது காதல் மனைவி ஜான்சிராணி கீதாவை பைக்கில் அழைத்து வந்து தேரிக்காட்டுக்குள் கொலை செய்து விட்டு தப்பியதையும் கண்டுபிடித்தனர்.

விசாரணைக்காக போலீசார் அவரது வீடுதேடிச்சென்ற போது அந்தோணி ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும், இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 வருடமாக அந்தோணிராஜ் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வேறு பெண்களுடன் பழகிக் கொண்டு ஊதாரியாக சுற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் தனது மனைவி வேறு நபர்களிடம் பேசுவதையும் சந்தேகக் கண்கொண்டு பார்த்த அந்தோணிராஜ் அவரை அடித்து உதைத்தாகவும் கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இரு குழந்தைகளையும் மாமியார் வீட்டில் விட்டு விட்டு, மனைவி ஜான்சிராணியை மட்டும் பைக்கில் அழைத்துக் கொண்டு தாங்கள் காதலித்த போது தனிமையில் சந்திக்கும் இடமான தேரிக்காட்டு பகுதிக்கு அந்தோணிராஜ் அழைத்துச்சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு வைத்து துப்பாட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை புதரில் மறைத்து போட்டு விட்டு வீட்டிற்கு தப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தனது மனைவியை கொலை செய்த விரக்தியில் இருந்த அந்தோணிராஜ் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். காதல் தம்பதிக்குள் நீடித்த பரஸ்பர சந்தேக தீ, அவர்களது ஏதுமாறியா 2 சின்னஞ்சிறு குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கிவிட்டது தான் சோகம்...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments