15 வினாடியில் எல்லாம் முடிந்தது.. லாரியால் நசுங்கிய கார்கள்... பாலத்தில் கவிழ்ந்த லாரி..! திகிலான சிசிடிவி காட்சிகள்

0 1746

தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இறக்கத்தில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று, முன்னால் சென்ற 2 கார்கள் 2 லாரிகளை அடுத்தடுத்து இடித்துத் தள்ளி சாலையில் தீப்பற்றி எரிந்தது. லாரி மோதிய வேகத்தில் காருடன், லாரி ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தொடர் சங்கிலி விபத்துக்களுக்கு முகவரியாய் மாறிப்போன தருமபுரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இறக்கத்தில் புதன் கிழமை தறிகெட்டு ஓடிய லாரியால் கோர விபத்து அரங்கேறியது.!

தருமபுரி - சேலம்  நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இறக்க பகுதியில் லாரிகளால் தொடர் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றன. அந்தவகையில் புதன்கிழமை கர்நாடகாவில் இருந்து  நெல் லோடு ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் இறக்கத்தில் சாலையில் அதிவேகமாக தறிகெட்டு ஓடியது. 

இதனை கண்டு கார் ஓட்டுனர் விலகிச்செல்ல முயல, அதற்குள் அந்த லாரி முன்னால் சென்ற ஈச்சர் லாரியையும், இரு கார்களையும் இடித்து தள்ள , அந்த வாகனங்கள் சரக்கு மூட்டைகள் ஏற்றிச்சென்ற மற்றொரு லாரியை இடித்து தள்ளியது. இதில் சாலையில்  மூட்டைகளுடன் புரண்ட லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அதனுடன் கார் ஒன்றும் கீழே விழுந்து முற்றிலும் நசுங்கியது.

ஈச்சர் லாரி முன்னோக்கி செல்ல, தறிகெட்டு ஓடிய லாரியின் முன்பக்கத்தில் தீப்பற்றிக் கொண்டதால் அந்த லாரி சாலையிலேயே முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் அந்த சாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

தறிகெட்டு ஓடிய லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை மட்டும் காணவில்லை என்று தெரிவித்த போலீசார், அவர் லாரியில் இருந்து குதித்து தப்பினாரா ? அல்லது லாரியில் பற்றிய தீயில் சிக்கி கருகி பலியானாரா ? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரியின் முன்பக்கத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை வைத்திருந்ததால் லாரி தீப்பற்றி எரிந்ததாகவும் 3 பேரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்த போலீசார், தோப்பூர் கணவாய் இறக்கத்தில் வரும் போது லாரி ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் வர வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டு அதிவேகத்தில் லாரிகளை இயக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்த விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதே சாலையில் தீவட்டிப்பட்டி காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம், கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் சரக்குவாகனம் கவிழ்ந்தாலும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட வில்லை.

இந்த பகுதியில் நிகழும் தொடர் சாலை விபத்துக்களை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments