இந்த ஆண்டின் முதல் ரூ 100 கோடி நாயகன் எஸ்.கே.வா..? தனுஷா..? வசூலில் அடித்து நொறுக்கிய ஹனுமன்..!

0 1322

பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டு முதலில் 100 கோடி வசூலை எட்டபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தெலுங்கு டப்பிங் படமான ஹனுமன், அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சேப்டர் 1 போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது

இந்த பொங்கல் பண்டிகையையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், அருண் விஜய் நடிப்பில் மிஷன் சேப்டர் 1, விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் தமிழில் நேரடியாகவும், தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், புதுமுக நடிகரான தேஜா சஜ்ஜாவின் ஹனுமன் ஆகிய படங்கள் திரைக்கு வந்திருந்தன.

தெலுங்கு திரை உலகின் பிரின்ஸ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் மகேஸ்பாபுவின் குண்டூர் காரம் 7 நாட்களில் உலக அளவில் 158 கோடி ரூபாயை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தாலும் படம் மிக்கப்பெரிய வெற்றி அல்ல என்று கூறப்படுகின்றது.

அற்புதமான கிராபிக்ஸ் உடன் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அனுமன் படம், பக்தர்களின் பலம் கைகொடுத்ததால் , 130 கோடி ரூபாயை தாண்டி உலகம் முழுவதும் வசூலில் பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகின்றது

குடும்ப ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக மெனக்கெடும் நாயகர்களின் ஒருவரான சிவகார்த்திகேயனின் அயலான் படம் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியானது. அயலான், 7 நாட்களில் உலகம் முழுவதும் 65 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் கன்னட சக்கரவர்த்தி சிவராஜ்குமார் நடித்திருந்ததால் கர்நாடகாவில் மட்டும் 900 திரைகளிலும் தமிழகத்தில் 300க்கும் அதிகமான திரையரங்குகளிலும் இந்த படம் வெளியானது.

முதல் நாள் டாப்பில் இருந்த கேப்டன் மில்லர், நெகட்டிவ் விமர்சனங்களால் வசூல் குறைந்து கடந்த 7 நாட்களில் 63 கோடிகளை வசூலித்து 4 வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தனுஷ் ரசிகர்களோ வசூல் 80 கோடிகளை தாண்டி விட்டதாக எக்ஸ் தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

யாருமே எதிர்பார்காத அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 என்ற படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 18 கோடி ரூபாய் வசூலை எட்டிப்பிடித்துள்ளது.

விஜய் சேதுபதியுடன் கத்ரினா கைப் இணைந்து நடித்து தமிழ் மற்றும் இந்தியில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 14 கோடி ரூபாயுடன் கடைசி இடத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஹனுமன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அயலான் மற்றும் கேப்டன் மில்லரின் வசூலை 100 கோடிக்கு எட்ட விடாமல் தடுத்துள்ளதாகவும் வரும் நாட்களில் ரசிகர்களின் வருகையை பொருத்து வசூல் நிலவரம் மாறுபடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments