காளை பேரைச் சொன்னதுமே சும்மா அதிருதில்ல..! அனல் பறந்த அலங்காநல்லூர்!!

0 782

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் கடைசி அரை மணி நேரத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியின் இறுதியில் 18 காளைகளைத் தழுவிய கருப்பாயூரணி கார்த்தி முதல் பரிசை வென்று காரை தட்டிச் சென்றார்.

காலை 7 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த உடனேயே அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் விறுவிறுப்பும் ஆரம்பமானது. கோயில் காளைகளை தொடர்ந்து, முதல் போட்டி காளையாக களம் கண்ட கொலுஞ்சிப்பட்டி சரவணன் காளை, சீறிப்பாய்ந்து உரிமையாளருக்கு தங்கக் காசை வென்று தந்தது.

அடுத்து அலங்காநல்லூர் ராஜேஷ் காளையை அவிழ்க்கப்போவதாக அறிவிப்பு வெளியான மறுநொடியில், மாடு பிடி வீரர்கள் தடுப்புகளின் மீது ஏறிக் கொண்டனர். அதையும் மீறி களத்தில் நின்றிருந்த நீலகண்டன் என்ற வீரரின் கழுத்தில் ராஜேஷ் காளையின் கொம்பு குத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகள் மாடு பிடி வீரர்களை கலங்கடித்தன. ஒரு சில காளைகள் நெருங்கி வந்த வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

காளைகள் போக்குக்காட்டிக் கொண்டிருந்த மறுபுறம் வீரர்கள் துணிச்சலுடன் திமிலைத் தழுவ முயன்றனர். மாடுகளை விடாப்பிடியாக பிடித்த வீரர்கள் பரிசுகளை தட்டிச் சென்றனர்.

5-வது படிக்கும் சபர்னாஸ்ரீ துவங்கி முதாட்டி ஒருவர் வரை பெண்கள் பலரும் தங்கள் வளர்ப்புக் காளைகளை களமிறக்கினர்.

ஆக்ரோஷமான ஒரு சில காளைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மாடு பிடி வீரர்கள் சிலர் தரையில் படுத்து லாவகமாக தப்பினர்.

காண்டாமிருகம், பேய், கெட்டவன், கொம்பன், கோச்சா என விதவிதமான பெயர்களில் களம் கண்ட காளைகள் வீரர்களுக்கு ரக ரகமாக வேடிக்கை காட்டின.

ஜல்லிக்கட்டுகளில் ரசிகர் பட்டாளம் கொண்ட கரூர் வெள்ளையன் காளை நீண்ட நேரம் வாடியை விட்டு வெளியே வராமல் அப்படியே நின்றிருந்தது. இதே போன்று ஏராளமான காளைகள் வாடியை விட்டு வெளியேறுவதில் சுணக்கம் காட்டின. இதனால் வழக்கமாக மாலை 5 மணிக்கு முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு ஆறே கால் வரை நீடித்தது.

களத்தில் யாராலும் நெருக்க முடியாத திருச்சி மேலூர் குணாவின் கட்டப்பா காளை முதலிடம் பிடித்து உரிமையாளருக்கு கார் ஒன்றை பரிசாக பெற்றுத் தந்தது.

மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டின் கடைசி அரை மணி நேரத்தில் கருப்பாயூரணி கார்த்தி, பூவந்தி அபிசித்தர் மற்றும் குன்னத்தூர் திவாகர் இடையே யார் அதிக காளைகளை தழுவுவது என்பதில் கடும் போட்டி நிலவியது.

மொத்தம் 810 காளைகளும் 500 மாடுபிடி வீரர்கள் களம் கண்ட ஜல்லிக்கட்டின் இறுதியில் 18 காளைகளைத் தழுவிய கருப்பாயூரணி கார்த்தி முதல் பரிசாக கார் வென்றார்.

17 காளைகளை தழுவி 2-வது இடம் பிடித்த அபிசித்தர் பரிசை பெற்றுக்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார்.

ஜல்லிக்கட்டின் இறுதியில் பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, வீரர்களுக்கு இடையே எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை என்றும் விதிகளுக்கு உட்பட்டே அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments