உழவுக்கும் உணவுக்கும் உயிருக்கும் உறுதுணையாக நிற்கும் மாடுகள்... விவசாயிகள் மட்டுமின்றி அனைவருமே மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்நாள்
உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக நின்ற மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக விவசாயிகள் இன்று மாட்டுப் பொங்கலை கொண்டாடுகின்றனர்.
உயிருக்கு அடிப்படையான உணவை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுவது மாடுகள்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உலகின் பிற பிரதேசங்களில் மாடுகளை உணவுக்காக வேட்டையாடி வந்தபோது, அவற்றைக் கொண்டு விவசாயம் செய்த சமூகமாக இந்திய சமூகம் இருந்துள்ளது.
ஏரில் பூட்டப்பட்ட காளைகள் மண்ணை பதமாக்கி பயிர் செய்ய உதவுகிறது என்றால், நம்மைப் பெற்ற தாய்க்கு அடுத்து தனது குருதியை பாலாக்கித் தருகின்றன பசுக்கள்.
இந்த நன்றியை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் கலாச்சாரம் உருவானது. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
மாட்டுப் பொங்கலன்று அந்தந்த வீடுகளில் அவர்கள் வளர்க்கும் காளைகளும் பசுக்களும்தான் ஹீரோ, ஹீரோயின்.
அவற்றின் கொம்புகளை சீவி, குளிப்பாட்டி, வர்ணம் பூசி, அலங்காரங்கள் செய்து, பொங்கலிட்டு படையல் வைப்பர்.
சிலர் மாடுகளுக்கு திருஷ்டி ஏற்படக் கூடாது என்பதற்காக காதோலை, கருகமணி ஆகியனவும் அணிவித்து அலங்கரிப்பர்.
கிராமங்களில் யாருடைய மாடு அன்றைய தினம் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது என்பதில் சக விவசாயிகளுக்கு இடையே போட்டியே இருக்கும்.
மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான, அழகான பந்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல், தமிழர்களின் வாழ்வியல் வழியில் முக்கிய பங்கை வகிக்கிறது.
Comments