பொங்கலோ பொங்கல் இது மகிழ்ச்சிப் பொங்கல்

0 826

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மஹர சங்கராந்தி என்ற பெயரில் தென் மற்றும் வட மாநிலங்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. 

ஆடிப்பட்டம் விதைத்த நெல், உயிர் பெற்று, பயிராகி தை மாதத்தில் அறுவடைக்கு வரும். விளைச்சல் தந்த இறைவனுக்கும் உடன் நின்று உதவிய சூரியனுக்கும், காளைகள் உட்பட அனைத்துக்குமே நன்றி சொல்லும் விதமாக  பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையைத் தொடர்ந்து வரும் சூரியப் பொங்கல் தைப் பொங்கலாக இன்று கொண்டாடப்படுகிறது. அறுவடை செய்த நெல்லை கொண்டு, புது அடுப்பில், மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் கட்டப்பட்ட புதுப்பானை வைத்து, சூரிய பகவானை மனமுருக வணங்கி நன்றி சொல்லி, பொங்கல் வைப்பார்கள். அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், கிழங்குகளை கொண்டு கூட்டு சமைக்கப்பட்டு அதுவும் சூரியனுக்கு படைக்கப்படும். ஊர் உலகுக்கு சோறுபோட ஏரெடுத்து பாடுபட்டு, உழைத்த உழைப்புக்கெல்லாம் பலன் கிடைத்த மகிழ்ச்சி விவசாயிகள் மனதில் பொங்கும் நாளாக இன்றைய நாள் உள்ளது.

நாளைய தினம் விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி சொல்லும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளின் கொம்புகளை சீவி வர்ணம் பூசி, குளிப்பாட்டி, சலங்கை கட்டிவிடுவார்கள். பிறகு மாடுகளுக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கன்னிப் பொங்கல் என்றழைக்கப்படும் காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து, விருந்துண்டு, பெரியோர் ஆசி பெறுவார்கள். இந்த நாளில் கிராமங்களில் உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற பல்வேறு விளையாட்டு மற்றும் வீர சாகசப் போட்டிகள் நடத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments