தூக்குடா.. தம்பி தூக்கு.... மாடி விட்டு.. மாடி தாவி பெண்ணை காப்பாற்றிய இளைஞர்..! சினிமா மாதிரி ஒரு நிஜ சம்பவம்

0 1839

மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பைனான்சியர், ஒரு வருடமாக நெருங்கிப் பழகி விட்டு திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறி பைனான்ஸ் நிறுவன மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, இளைஞர் ஒருவர் மாடி விட்டு மாடி தாவிக் காப்பாற்றினார்.

பூட்டப்பட்ட கடைக்கு காவல் போல கண்ணை உருட்டிக் கொண்டு பால்கனி சுற்று சுவரில் குதிக்க தயாராக அமர்ந்திருக்கும் இவர் தான் மேட்ரிமோனியல் மாப்பிள்ளையை கண்டித்து தற்கொலை போராட்டம் நடத்திய சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பெண்..!

கிருஷ்ணகிரி பெங்களூர் பழைய சாலையில் நிதி நிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நடத்திவரும் குணசேகரன் என்பவர் ஒரு வருடத்துக்கு முன்பு மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து இந்த பெண்ணை திருமணம் செய்ய, நிச்சயதார்த்தம் செய்துள்ளார். பின்னர் நெருங்கி பழகி வந்த அவர், ஒரு கட்டத்தில் இப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்தியதோடு, செல்போன் நம்பரையும் பிளாக் செய்ததாக கூறப்படுகின்றது.

தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய குணசேகரனின் கடைக்கு இப்பெண் நேரடியாக சென்றதால், அவர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து பூட்டப்பட்ட கடையின் முதல்மாடி பால்கனியில் அமர்ந்த இந்த பெண், தன்னை ஏமாற்றிய குணசேகரனை அழைத்து வரவேண்டும் என்றும், இல்லையேல், கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெண்ணின் பெற்றோரும், போலீசாரும் அறிவுறுத்தியும் கீழே இறங்க மறுத்து அடம் பிடித்தார்

இந்த பெண்ணை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் சென்றதால், குதிப்பது போல கால்களை வெளியே தூக்கிபோட்டுக் கொண்டு, குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் அவரை தடுக்க இயலாமல் தீயணைப்பு வீரர்கள் பின் வாங்கினர்

மேட்ரிமோனியல் மாப்பிள்ளை குணசேகரனோ செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டதால் அவரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. நேரம் செல்ல செல்ல பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது. போலீசார் மேல் மாடியில் இருந்து குதித்து இந்த பெண்ணை தடுத்து மீட்டு விடலாமா என்று பார்த்தனர். அதுவும் இயலவில்லை

மயக்கம் வருவது போல கண்களை இப்பெண் உருட்டிக் கொண்டிருந்த நிலையில் அடுத்த கனமே பக்கத்து மாடி பால்கனியில் இருந்து ஜாக்கிசான் போல மாடிவிட்டு மாடி தாவிக்குதித்த சுகுமார் என்ற இளைஞர், இவரை மடக்கிபிடித்து குதிக்க விடாமல் காப்பற்றினார். கீழிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்

உடனடியாக தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் ஓடிவந்து மடக்கிபிடித்துக் கொண்டனர். மயக்கம் அடைந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை தெளித்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர் சுகுமாரை ஆட்டோக்காரர் ஒருவர் முத்தமிட்டு பாராட்டினார்.

இளம் பெண் தெரிவித்த புகார் தொடர்பாக இருதரப்பையும் அழைத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments