வேட்டிய அவிழ்த்து கையில வச்சி.. அரசு பஸ் கூரையில் ஏறி.. மாணவர்கள் அடாவடி பொங்கல்..! கலாட்டா பாய்ஸால் பயணிகள் அவதி

0 1293

சென்னையில் பச்சையப்பன் மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய கலாட்டா பொங்கல் விழாவால் பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர். மாநகர பேருந்தின் கூரையில் ஏறி கலாட்டா செய்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது

மாணவர்கள் படிக்கட்டில் தொங்காமல் இருக்க ஜன்னலை அடைச்சாலும் சரி.. வாசலையே மூடினாலும் சரி தங்களது பரிணாம வளர்ச்சியை மறக்காத மாணவர்கள் , சென்னை சென்டிரலில் மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த கலாட்டா காட்சிகள் தான் இவை..!

வழக்கமாக கெண்ட காலுக்கு மேல கட்டையாக பேண்ட் அணியும் புள்ளீங்கோ பாய்ஸ்சில் சிலர் பாரம்பரியம் என்று வேட்டி எல்லாம் அணிந்து மாநில கல்லூரிக்கு பேரணியாக சாலையில் சென்றனர்

அந்தவழியாக வந்த மாநகர பேருந்தை கண்டதும், கருவாட்டை கண்ட பெருச்சாளி போல ஓடிச்சென்று ஆளுக்கு ஒரு பக்கமாக தாவி கூரை மேல் ஏறியதோடு, இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து கையில் வைத்து சுற்றிக் கொண்டு ஏதோ இமாலய சாதனை புரிந்ததை போல ஓலமிட்டபடி சென்றனர்

மாணவர்கள் கையில் கிடைத்த அரசு பேருந்து ஆமை வேகத்தில் நகர , பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். மற்ற வாகன ஓட்டிகளும் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல இயலாமல் கடும் தவிப்புக்குள்ளாயினர்

மாநில கல்லூரி வாசலிலும் மாணவர்கள் செய்த ரகளையால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்

மாநில கல்லூரி மாணவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கலாட்டா பொங்கல் கொண்டாடினர். அரசு பேருந்தை மறித்து கூரையில் ஏறி அட்டகாசம் செய்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் விட்டால் போதும் என்று இறங்கிச்சென்றதால் பேருந்து காலியாக செல்லும் நிலை ஏற்பட்டது

மாணவர்களில் ஒரு தரப்பினர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி வாசலின் இரும்பு கேட்டில் ஏறி அட்டகாசம் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

நந்தனம் அரசு கல்லூரியில் மாணவர்கள் கத்தியுடன் இரு தரப்பாக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மாணவர்கள் சாலையில் இவ்வளவு அட்ராசிட்டியில் ஈடுபட்ட நிலையில், அடையாறு எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் ஆயிரக் கணக்கான மாணவிகள், வண்ண உடைகள் அணிந்து வந்து பங்கேற்றனர்

விளையாட்டு போட்டிகள், ஆட்டம் பாட்டமென பொங்கல் விழாவை மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments