''கிளாம்பாக்கம்... கிளம்புறது அலைச்சல்... தென் மாவட்ட பயணிகள் பாவமில்லையா..?'' இப்படி செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்
கோயம்பேடு வந்து செல்லும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில்,.. கிளாம்பாக்கத்துக்கு செல்வதே தங்களுக்கு சிரமமான காரியம் என்று வேதனை தெரிவிக்கும் பயணிகள் மற்ற பேருந்து நிலையங்களில் இருந்தும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமைக்குரிய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், அங்கிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றது.
பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும் பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை சென்றடைவதற்கும், அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் முறையான ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இல்லை என்று பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையின் வடக்கு பகுதியில் உள்ள மணலி, திருவொற்றியூர், எண்ணூர் போன்ற பகுதியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஒட்டுமொத்த பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முழுமையாக மாற்றப்படவில்லை முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் SETC பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழக TNSTC பேருந்துகளும் என தென் மாவட்ட பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கலுக்கு அதிக அளவில் தென்மாவட்டம் புறப்பட்டுச்செல்லும் பயணிகள் அதிக அலைச்சலுக்குள்ளாக நேரிடும் என்கின்றனர்
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நிபுணர்கள் பல்வேறு யோசனைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்
மாதவரத்தில் இயங்கும் பேருந்து நிலையத்தில் ஆந்திரா பேருந்துகள் மட்டுமில்லாமல் , கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் பேருந்துகளை அங்கிருந்து இயக்கலாம் என்கின்றனர்.
அங்கிருந்து வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் இன்றி ஜிஎஸ்டி சாலையை சென்றடைந்து வெளியூர் செல்லலாம் என்கின்றனர்
அதேபோல் திருமழிசை அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் கோயம்பேட்டில் இருந்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தும் எல்லா வெளியூர் பேருந்துகளும் பகுதியாக பிரித்து இயக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை இன்றி மக்கள் அவர்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து சிரமமின்றி வெளியூர்களுக்கு பயணிக்கலாம் என்ற பரிந்துரையை பொது போக்குவரத்து நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.
Comments