ரத்தம் இல்லை.. கைரேகை இல்லை.. 2 பாட்டில் இருமல் மருந்து தான்... இரக்கமற்ற முறையில் மகன் கொலை..! ஸ்டார்ட் அப் நிறுவன அதிகாரி சிக்கியது எப்படி ?
4 வயது மகன் கொலை வழக்கில் சடலத்துடன் சிக்கிய பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவன பெண் தலைமை செயல் அதிகாரி, தனது மகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறி போலீசாரை குழப்பிய நிலையில், ஓட்டல் அறையில் கைப்பற்றப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களால் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளார்
பெங்களூருவில் உள்ள மைண்ட்புல் ஏ ஐ லேப் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் சார்ந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் சுசனா சேத் ..! இவர் கணவர் வெங்கட்ராமனை பிரிந்து பெங்களூரில் வசித்துவந்த நிலையில் 4 வயது மகனை கோவாவுக்கு அழைத்துச்சென்று ஓட்டலில் வைத்து கொலை செய்ததாகவும், சிறுவனின் சடலத்தை பையில் அடைத்து காரில் பெங்களூருக்கு கடத்திச்சென்ற வழியில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரிடம் தான் மகனை கொலை செய்யவில்லை என்றும் உடல் நலக்குறைவால் தனது மகன் இறந்து போனதாகவும் , அவனது சடலத்தை தனது பையில் வைத்து எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். சிறுவனின் சடலத்தில் ரத்தமோ, காயங்களோ இல்லாததால் போலீசார் குழப்பம் அடைந்தனர். மேலும் அவர் தங்கிருந்த ஓட்டல் அறையின் குப்பை தொட்டியில் இருந்து, சிறியதாக ஒரு இருமல் மருந்து பாட்டிலும், பெரிய அளவிலான இருமல் மருந்து பாட்டிலும் காலியாக கிடப்பதை கைப்பற்றிய போலீசார், சுசனா சேத் தனது மகனுக்கு இருமல் மருந்தை கொடுத்து கொலை செய்திருக்க கூடும் என்று தெரிவித்தனர்.
மேலும் இருமல் மருந்து குடித்த பின்னர் ஒரு வேளை சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வதென்று யோசித்து சுசனா சேத், தனது கைரேகை படாதவகையில் துணியாலோ அல்லது தலையணையாலோ சிறுவனின் முகத்தை அழுத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஜகார்த்தாவில் இருந்து நாடு திரும்பிய சுசனாவின் கணவர் வெங்கட ராமனிடம் , பிரேத பரிசோதனைக்கு பின்னர் மகனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பிணக்கூறாய்வில் சிறுவன் தலையனையால் அழுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருப்பதாக வெங்கட ராமன் தெரிவித்தார். தொடர்ந்து சுசனா சேத்திடம் கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments