உலகின் புத்திச்சாலி பெண்ணாம்..! 4 வயது மகனை கொன்று டிராவல் பேக்கிற்குள் அடைத்தார்..! பாராட்டு பெற்றவர் கையில் விலங்கு

0 1866

உலகின் புத்திசாலித்தனமான பெண் என்று பெருமை பெற்ற பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஒருவர், தனது 4 வயது மகனை கொலை செய்து டிராவல் பேக்கிற்குள் மறைத்து எடுத்துச்சென்ற போது போலீசாரிடம் சிக்கினார்.

பெங்களூருவில் உள்ள மைண்ட்புல் ஏ ஐ லேப் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் சார்ந்த நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தவர் சுசனா சேத் ..!

சென்னையில் பள்ளி படிப்பையும், கொல்கத்தா நகரில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற அவர், அமேரிக்காவில் பணியாற்றிய அனுபவத்தில் பெங்களூரில் ஏ ஐ லேப் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பெண்களில் புத்திசாலியான 100 பெண்கள் பட்டியலில் சுசனா சேத் பெயரும் இடம் பெற்றது.

இவரது கணவர் அமெரிக்காவில் பணியில் உள்ள நிலையில் சுசனா சேத் , தனது 4 வயது மகனுடன் பெங்களூரில் வசித்து வந்தார்.

கடந்த 6-ந்தேதி சுசனா சேத் வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான அடுக்குமாடி ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.

திங்கட்கிழமை அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவசர அவசரமாக பெங்களூரு திரும்பி செல்ல கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து காரில் பெங்களூரு திரும்பி கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததும், ரத்த கறைகள் படிந்த துணிகள் கிடந்ததை பார்த்தும் அதிர்ச்சியடைந்த அவர் ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சந்தேகம் அடைந்த அவர்கள் சுசனா சேத் அறையை காலி செய்து சென்ற போது அவருடன் வந்த சிறுவன் மாயமானதை கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்

முதல் நாள் சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது.

அதே நேரம் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரித்தபோது , சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் தான் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கறாராக கேட்டது தெரியவந்தது.

இங்கிருந்து விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவுதான் என அறிவுறுத்தியும் சுசனா சேத், டாக்சியில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று கறாராக கூறிச் சென்றது தெரியவந்தது.

ஓட்டலை விட்டு வெளியேறும் போது அவர் கையில் உள்ள ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்து சென்ற காட்சிகளை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக திகழும் சுசனா சேத் யாருடைய உதவியையும் கேட்காமல் பெரிய பேக்கை அவரே எடுத்து சென்றது ஏன்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் போலீசார் சுசனா சேத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் எங்கே? என விசாரித்தனர்.

அதற்கு சுசனா சேத், தனது மகனை படோர்டாவில் உள்ள நண்பர் வீட்டில் விட்டு வந்துள்ளதாக கூறினார்.

அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலியான முகவரி என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது.

இதைத்தொடர்ந்து கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர்.

அதன்படி டிரைவர் காரை ஜமங்கலா போலீஸ் நிலையத்தில் நிறுத்தினார்.

அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த டிராவல் பேக்கில் சுசனா சேத்தின் மகன் கொலை செய்யப்பட்டு துணிகளுக்குள் சடலமாக சுற்றிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் கொலைக்கான காரணத்தை தெரிவிக்காமல் அழுதபடியே இருந்தார்.

இதையடுத்து அங்கு விரைந்த கோவா போலீசார் , அமெரிக்காவில் உள்ள சுசனாவின் கணவரை உடனடியாக புறப்பட்டு வர தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறு பாடு ஏற்பட்டு சுசனா பிரிந்து வாழ்ந்ததாகவும், நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த வழக்கின் விசாரணை திருப்தி அளிக்காமல் இழுத்துக் கொண்டே சென்றுள்ளது.

மேலும் குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்ற பிரச்சனைக்கு தீர்வாக, குழந்தை தந்தையிடம் செல்லும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தான் தனது மகனை சுசனா கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments