உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்..!

0 802

50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனங்களின் பங்கேற்புடன் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கி நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிய ஆலைகளை நிறுவவும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் டாடா, ஹூண்டாய், டி.வி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டன. 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட பிரதிநிகளும், தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை வடிவ சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் வழங்கினார். மேடையில் அமர்ந்திருந்த முதலீட்டாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ள தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாயில் மின்வாகன உற்பத்தி ஆலை அமைக்க வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடனும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவ டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், ஜே.எஸ்.டபுள்யூ, டி.வி.எஸ். குழுமங்கள் உள்ளிட்டவை ஆலை தொடங்கவும், ஹூண்டாய், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டன.

முன்னதாக, செமிகண்டக்டர் தொழிற்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதனை பெற்றுக்கொண்டார். மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்கான தொலைநோக்கு திட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சிறப்புகளை விளக்கும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சிறப்பு வீடியோ திரையிடப்பட்டது.

பின்னர், நடனக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் விழா மேடையில் அரங்கேற்றப்பட்டன.

மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பர்ய நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments