ஒரு டிரில்லியன் டாலர் வளர்ச்சியை நோக்கி தமிழகம்.. 2030ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைய திட்டம்

0 958

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு பயணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி அவசியமானது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பெய்த மழை போல தமிழ்நாட்டில் முதலீடுகள் மழையாக பொழியும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.

தமிழக பொருளாதாரம் அதிவிரைவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறிய முதலமைச்சர், ஒவ்வொருவருக்கும் அவரவர் மாவட்டங்களிலேயே வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் செயலாற்றுவதாக குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவதை தாம் வழக்கமாக கொண்டிருந்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர், பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவன பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளதால் இன்று தாம் அந்த ஆடையை அணிந்துள்ளதாக விளக்கமளித்தார்.

மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கு தமிழகத்தின் பங்கு அளப்பரியது என குறிப்பிட்டார்.

நாடு பொருளாதார வளர்ச்சியை எட்ட கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சவால்களை மத்திய அரசு எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார். நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுவதாகவும், பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் பங்களிப்பு அவசியமானது என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஆட்டோமொபைல், மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments