ஆளுக்கு 251 ரூபாய் தான்.. தமிழக லாரி ஓட்டுநரை காப்பாற்றிய வாட்ஸ் அப் குழு ..! மனிதாபிமானம் தான் இவங்க சொத்து..
விசாகப்பட்டினத்தில் லாரியுடன் விபத்தில் சிக்கிய நாமக்கல் லாரி உரிமையாளர் ஊர் திரும்ப இயலாமல் லாரியுடன் தவித்த நிலையில் , 300க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பண உதவி செய்து, எந்த ஒரு சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத அவரையும், அவருக்கு சொந்தமான லாரியையும் நாமக்கல்லுக்கு மீட்டு கொண்டுவர உதவிக்கரம் நீட்டியுள்ளனர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தனக்கு சொந்தமான லாரியில் இங்கிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு அசாம் சென்றுள்ளார். அங்கிருந்து ரப்பர் சீட்டுக்களை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டுள்ளார். கடந்த 31ஆம்தேதி விசாகப்பட்டினம் வந்த போது திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்த நபரின் மீது மோதுவதை தவிர்க்க திருப்பியதால் லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
லாரியின் முன்பக்கம் கடுமையாக சேதம் அடைந்தது. லாரியை ஓட்டி வந்த ஈஸ்வரனுக்கும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவரிடம் 40 ஆயிரம் ரூபாய் இருந்த நிலையில் வழக்கு செலவுக்கு என்று போலீசார் 10 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டனர்.
விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு பெருந்துறைக்கு கொண்டுவர 1 லட்சம் ரூபாய் ஆகும் என்ற நிலையில் , அவர் எந்த ஒரு சங்கத்திலும் இல்லாததால் எவரும் உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து லாரி உரிமையாளர்களுக்கான எதிர்நீச்சல் என்ற வாட்ஸ் அப் குழுவில் தனது நிலையை விளக்கி உதவி கேட்டு வீடியோ ஒன்றை 2ஆம்தேதி பதிவிட்டார் ஈஸ்வரன்
ஈஸ்வரனின் வீடியோவை எவரும் கண்டுகொள்ளாத நிலையில் லாரி உரிமையாளரின் வேதனையை அறிந்த கோவில்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேஷ் என்பவர் 5 ஆம்தேதி மதியத்திற்கு பின்னர் இ வாகன் சேவை என்ற தனது செயலி மூலம் அவருக்கு உதவும் நோக்கில் நிதி திரட்ட தொடங்கினார்.
அதிகமாக இல்லாமல் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தலா 251 ரூபாய் செலுத்தினால் எளிதாக அவருக்கு உதவ முடியும் என்று கோரிக்கை வைத்தார்
தனது செயலி மூலம் பணம் செலுத்துவதற்கான கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து அதில் பணம் செலுத்தி உதவ கூறி உள்ளார். அடுத்த நிமிடமே ஆளுக்கு 251 ரூபாய் என அடுத்தடுத்து ஒவ்வொருவராக பணம் செலுத்த தொடங்கினர்.
இதில் ஒரே நாளில் மட்டும் 300 பேர் பணம் செலுத்திய நிலையில், விபத்தில் சிக்கிய லாரியை பெருந்துறைக்கு கொண்டுவர 1 லட்சம் ரூபாய் கேட்ட நிறுவனமோ, 70 ஆயிரம் கொடுத்தால் போதும், தாங்களும் அவருக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்று கூறி மீட்பு வாகனத்தை விசாகப்பட்டினம் அனிப்பி வைத்தனர்.
இன்சூரன்ஸ் நிறுவனமோ, லாரி இங்கு கொண்டு வரப்பட்டதும் ஈஸ்வரனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இதனால் கடந்த 6 நாட்களாக தவித்த தமிழக லாரி உரிமையாளர் ஈஸ்வரனுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. தனக்கு உதவிக்கரம் நீட்டிய அத்துணை பேருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
வழக்கமாக வெளி மாநிலங்களில் விபத்தில் சிக்கும் லாரிகளை சம்பந்தப்பட்ட சங்கங்கள் மீட்டு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் ஈஸ்வரன் எந்த ஒரு சங்கத்திலும் உறுப்பினராக இல்லாததால் அவருக்கு சங்கங்கள் உதவ முன்வரவில்லை .
அதே நேரத்தில் லாரி உரிமையாளர் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பலரும் மனிதாபிமானத்தோடு உதவியதாகவும் தெரிவித்தனர்.
Comments