ஐயோ.. குழந்தை.. குழந்தை.. வாயில் கவ்வி தூக்கிட்டு போச்சி.. ஆட்கொல்லி.. சிறுத்தை அட்டகாசம்..!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் எலமன்னா கிராமத்தில் கடந்த வாரம் சிறுத்தை தாக்கி பெண்மணி உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை 3 வயது பெண் குழந்தையை தாக்கிக் கொன்று கவ்வித்தூக்கிச்சென்ற சம்பவத்தால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
சிறுத்தை கவ்வித்தூக்கிச்சென்ற பெண் குழந்தையை தேயிலைக்காட்டுக்குள் தேடிக்கண்டுபிடித்து... மூர்ச்சையற்ற சிறுமியை முதல் உதவி சிகிச்சைக்காக தூக்கிச்செல்லும் காட்சிகள் தான் இவை..!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஏலமண்ணா, பிதற்காடு, சேரம்பாடி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகே உலா வரும் சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன் மூன்று பெண்களை சிறுத்தை தாக்கிய நிலையில் அவர்களில் சரிதா என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கிராம பகுதியில் நுழைந்த சிறுத்தை குடியிருப்பு முன் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கவ்வி செல்ல முயன்றது. அப்பகுதி மக்கள் சத்தம் எழுப்பி சிறுத்தையிடமிருந்து சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி சிறுத்தையை மயக்கி ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்ட நிலையில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வன கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இரண்டாவது நாளாக ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் சிறுத்தையின் கால் தடங்களை வைத்து பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குழுக்களாக பிரிந்து தேயிலை தோட்டங்களில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே சனிக்கிழமை மாலை நெல்லியாலம் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடிக்குச் சென்ற வடமாநிலத்தை சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளியான சிவசங்கர் - தேவி தம்பதியினரின் மூன்று வயது சிறுமி நான்சியை சிறுத்தை தாக்கி கவ்விப்பிடித்து தேயிலை தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் கையில் கம்புகளுடன் , தேயிலை தோட்டத்திற்குள் சத்தமிட்டுக் கொண்டே தேடிச்சென்றனர்
சிறுத்தை அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் காயங்களுடன் மூர்ச்சையாகி கிடந்த சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் வனத்துறையினரை கண்டித்து கூடலூரில் இருந்து பந்தலூர் வழியாக கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத கிராம மக்கள் பல மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது
Comments