மத்தியப் பிரதேசத்தில் நவீன முறை விவசாயம்
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயத்தில் ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த டிரோன்கள் சென்னையில் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயத்தில் தொழில் நுட்பங்களை புகுத்தி அவற்றை மேம்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.இந்தியாவில் சோயா பீன்ஸ் உற்பத்தியில் 60 சதவீதத்தை மத்திய பிரதேச மாநிலம் பூர்த்தி செய்கிறது. சோயா பீன்ஸ், பீன்ஸ் வகைகள், கொண்டக்கடலை மற்றும் கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியில் மத்திய பிரதேச மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தல், விதைகளைத் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்னையில் இருந்து கொண்டு வரப்படும் ட்ரோன்கள் மத்திய பிரதேசத்தில் பயன்படுத்தவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ட்ரோன்கள் பயன்பாட்டை இங்குள்ள விவசாயிகள் அதிகம் விரும்புவதாகவும், விவசாயிகளின் வேலைப்பளு குறைக்கப்பட்டு அதிக அளவில் விவசாயம் செய்ய முன்வருவதாகவும் கூறப்படுகிறது.
10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிரோன்களுக்கு 75 சதவீதம் வரை அரசு மானியம் கிடைப்பதால் ட்ரோன்கள் வாங்குவதோ, அவற்றை பயன்படுத்துவதோ பெரிய சிக்கலாக இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் காஷ்மீரில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயத்திலும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments