நெஞ்சு வலிக்கு.. வாயு பிடி சிகிச்சை தவறான ஊசி போட்ட டாக்டருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை..! சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0 1672

சென்னை தண்டையார்பேட்டையில்  நெஞ்சுவலியால் துடித்த இளைஞருக்கு 'வாயுப்பிடிப்பு' என்று தவறான ஊசி மருந்து செலுத்தி, உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த வசந்தம் மருத்துவமனையின் மருத்துவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது

நெஞ்சு வலி என்று சிகிச்சைக்கு சென்றவருக்கு தவறான ஊசி போட்டு உயிரிழப்புக்கு காரணமானதாக நீதிமன்றத்தால் ஒரு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட வசந்தம் மருத்துவமனையின் மருத்துவர் நந்திவர்மன் இவர் தான்..!

சென்னை வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள், இவரது மூத்த மகன் சரவணக்குமார் . மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சரவணகுமார் வேலைக்காக கம்பெனி பேருந்தில் ஏறுவதற்காக வண்ணாரப்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

சரவணக்குமாரை தண்டையார் பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வசந்தா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்குள்ள மருத்துவர் நந்திவர்மன் ஆலோசனைப்படி செவிலியர்கள் இசிஜி எடுத்து பின்னர் ஊசி போட்டனர். பின்னர் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை வாயுக்கோளாறு தான் கூறியுள்ளனர்.

அவருக்கு நெஞ்சுவலி சரியாகாததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் எங்களை அனுப்புங்கள் என கேட்டபோது , மருத்துவர் நந்திவர்மனோ, சரவணகுமாருக்கு கேஸ் ட்ரபுள் தான் ஒன்றும் பிரச்சனை இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்றும் கூறி உள்ளார் . அடுத்த சில நிமிடங்களில் வலிப்பு வந்த நிலையில் சரவணக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார் .

சரவணகுமார் உயிரிழப்பிற்கு இறப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சைதான் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, போலீசிலும் புகார் அளித்தனர். தண்டையார்பேட்டை போலீசார் சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பிரேத பரிசோதனை அறிக்கையில் பினார்கான் என்ற மருந்து சரவணகுமாருக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து வழங்கக் கூடாது எனவே மருத்துவர் நந்திவர்மன் செலுத்திய தவறான ஊசியே உயிரிழப்பிற்கு காரணமானதாக கூறப்பட்டது.

இதையடுத்து சென்னை பெருநகர 15வது நீதிமன்றத்தில் சரவணகுமாரின் தாய் மீனாம்பாள், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆறு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் சுதா அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார். தவறான சிகிச்சையால் சரவணகுமார் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் நந்திவர்மனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழங்க தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான சிகிச்சை அளித்தால் , நம்மை ஒன்று செய்ய முடியாது என்ற மனோபாவத்தில் இருக்கும் அலட்சிய மருத்துவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி..!

அதே நேரத்தில் ஒரே வருவாய் ஆதாரமாக இருந்த மகன் சரவணக்குமார் இறந்த பின்னர் வருமானத்திற்கு வழியின்றி வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், அரசு தனக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும் என்றும் தாய் மீனாம்பாள், தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments