நர்மதை ஆற்றில் மிதக்கும் 160 டன் மின் டிரான்ஸ்பார்மர்..! 800 ஏக்கரில் சோலார் பேனல்..!!
5 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மத்திய பிரதேச மாநிலம் ஓம்கரேஸ்வர் அணையில் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில், மின் உற்பத்தியை துவங்க உள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தின் சிறப்பு கூறுகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
மத்திய பிரதேசத்தில் கடல் போல காட்சியளிக்கும் நர்மதை ஆற்று அணை மீது பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தின் காட்சிகள் தான் இவை.
கொட்டித் தீர்க்கும் கனமழை ஒருபுறம், மழையே இல்லாத கடும் வறட்சி ஒருபுறம் என உலகையே பருவநிலை மாற்றம் ஆட்டம் காண வைத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய அரசும், மாநில அரசோடு இணைந்து மத்திய பிரதேசத்தின் காண்ட்டுவா மாவட்டத்தில் உள்ள ஓம்கரேஸ்வர் அணை பகுதியில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகிறது.
நர்மாத நதியில் அமைந்துள்ள இந்த அணையில் தினசரி 5 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் 600 மெகா வாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் வகையில் 800 ஏக்கரில் சூரிய ஒளி தகடுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. 2 கட்டங்களாக சூரிய ஒளி தகடுகளை நிறுவ திட்டமிட்டு அதற்கான பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கியது.
முதல் கட்டத்தில் 300 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி தகடு தண்ணீரின் மேலே மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் வரும் மார்ச் முதல் வாரத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தனர் அதிகாரிகள்.
வீட்டின் மாடியில் கூட பேனல் பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் போது, இதில் என்ன சிறப்பு என்ற கேள்விக்கு, தண்ணீரின் மேற்பரப்பில் சுமார் 400 ஏக்கரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சூரிய ஒளி பேனல் அமைக்கப்பட்டிருப்பதும், தயாரிக்கப்படும் மின்சாரத்தை சேமிக்க 160 டன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களும் தண்ணீரில் மிதக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.
160 டன் கொண்ட இந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் இன்வெர்ட்டர் இருக்க கூடிய அமைப்பானது பெரோ ((FERRO)) சிமெண்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ளதால் அவை நதியில் மிதந்து கொண்டே இருக்கும் என தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். ஏதாவது பழுது என்றாலும் இந்த சிஸ்டத்தை கரைக்கு தள்ளிக் கொண்டே சென்று சரி செய்து விடலாம் எனவும் கூறப்படுகிறது.
சூரிய ஒளி பேனல்களை குளிரூட்ட தேவைப்படும் தண்ணீரை அணையில் இருந்தே எடுத்து பயன்படுத்துவதோடு அது மீண்டும் அணையிலேயே சேகரிக்கப்படுவதால் தண்ணீர் சேமிப்பு ஏற்படுவதோடு, தண்ணீர் ஆவியாவதும் தடுக்க முடிகிறது.
வழக்கமாக ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 5 முதல் 7 ரூபாய் செலவாவதோடு பராமரிப்பு செலவுகளும் அதிகமாக இருக்கும் நிலையில், சூரிய ஒளி தகடுகள் மூலம் ஒரு யூனிட் உற்பத்தி செய்ய 3 ரூபாய் 21 காசுகள் மட்டுமே செலவு ஆவதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்போடு, பொருளாதார சிக்கனத்தை கொண்ட இத்திட்டம் வெற்றி பெற்றால் பல்வேறு பகுதிகளிலும் செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
Comments