மாட்டு சாணத்தை கரைத்து... போலீஸ் மீது ஊற்றிய பெண் விவசாயி...!!
தருமபுரி அருகே, தகராறில் உள்ள நிலத்தை அளவீடு செய்யும் பணிக்கு பாதுகாப்பிற்குச் சென்ற காவல்துறை எஸ்.எஸ்.ஐ. மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய்-மகளை போலீஸார் கைது செய்தனர்.
நிலம் அளவீடு செய்யும் பணிக்கு பந்தோபஸ்த்திற்குச் சென்ற இடத்தில் மாட்டுச் சாண கரைசலை காக்கிச் சட்டையில் ஊற்றி அழுக்காக்கினாலும் தனது கடமையைச் செய்த காவல்துறை எஸ்.எஸ்.ஐ. சரவணன் தான் இவர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுக்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாலம்மாள். இவருக்கு, அதேப்பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தின் அருகிலேயே சாலம்மாளின் அக்கா முனியம்மாளுக்கும் நிலம் உள்ளது.
இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், தனது நிலத்தை சர்வேயர் மூலமாக முழுமையாக அளந்து விட முடிவு செய்தார் சாலம்மாள்.
நிலத்தை அளவீடு செய்யக்கோரி நல்லம்பள்ளி வட்டாட்சியரிடம் சாலம்மாள் மனு அளித்ததைத் தொடர்ந்து, பாகலஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், சர்வேயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டுகாரம்பட்டிக்குச் சென்றனர். அளவீடு செய்யும் இடத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக தொப்பூர் போலீஸாரும் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தனர்.
நிலத்தை அளவீடு செய்யக் கூடாதென முனியம்மாளும் அவரது மகள் மாதம்மாளும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் நிலத்தை அளவீடு செய்வதே நல்லது என அதிகாரிகள் விளக்கி கூறியும் அதனை தாயும் மகளும் ஏற்கவில்லை.
நிலத்தை அளக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த மாதம்மாள் திடீரென தனது வீட்டிலிருந்த மாட்டுச் சாணத்தை வாளியில் கரைத்து எடுத்து வந்து போலீஸார் முன்னிலையில் சாலம்மாள் மீது ஊற்றினார். அதிர்ச்சியடைந்த போலீஸார், மாதம்மாளிடம் நீ செய்வது தப்பு என எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு சுற்றி இருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் சுற்றி சுற்றி வந்து சாணத்தை ஊற்றி ஆவேசமானார் மாதம்மாள்.
அவரை மடக்கி பிடிக்க முயன்ற தொப்பூர் எஸ்.எஸ்.ஐ., சரவணனின் காக்கி உடை மற்றும் முகத்திலும் சாண கரைசல் ஊற்றப்படவே, அதனை மற்றொரு காவலர் தனது செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்ததோடு, உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
இந்த சாண கரைசல் சம்பவம் குறித்து தொப்பூர் போலீஸில் புகாரளித்தார் நிலத்தை அளவீடு செய்ய வந்திருந்த சர்வேயர் ஜோதி. இதனையடுத்து, சாண கரைசலை ஊற்றிய மாதம்மாள் அவரது தாயார் முனியம்மாளை கைது செய்தனர் தொப்பூர் போலீசார்.
அக்காள்-தங்கை இடையிலான பிரச்னையை தீர்க்கச் சென்ற அதிகாரிகள் மீது சாணத்தை ஊற்றியதால் தற்போது புதிய பிரச்னையில் தாயும்-மகளும் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர் போலீஸார்.
Comments