செருப்பு வீசிட்டாய்ங்க...சார் இது தளபதிக்கு தெரியுமா...? வீசினதே அவர் மேலதான் சார்..! செருப்பு வீசிய.. கருப்பு ஆடு யார் ?

0 6461

 நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலில் செலுத்த சென்றபோது நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட  விவகாரம் குறித்து கோயம்பேடு போலீசில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் புகார் அளித்துள்ள நிலையில், பெண்கள் அணியும் செருப்பை  வீசிய கருப்பு ஆட்டை போலீசார் தேடி வருகின்றனர்

செந்தூரப்பாண்டி படம் மூலம் தனது திரைஉலக வாழ்க்கையில் ஏற்றம் தந்த விஜயகாந்தின் மரணச்செய்தி கேட்டு உடைந்து போன நடிகர் விஜய், வெளி நாட்டில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்னை திரும்பினார். கடும் கூட்ட நெரிசலில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்தார் விஜய்

விஜய்காந்தின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழையில் இரு கைகளையும் வைத்து தொட்டுக்கும்பிட்டு விட்டு பிரேமலதாவிடம் துக்கம் விசரித்த பின்னர் கனத்த இதயத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்

முண்டியடித்த கூட்ட நெரிசலில் இருந்து போலீசார் அவரை பாதுகாப்பாக காருக்கு அழைத்துச்சென்றனர். அப்போது சில ரசிகர்கள் அவரை தொட்டு முத்தமிட்டபடியே சென்றனர்

அவர் காரில் ஏறுவதற்கு முன்னதாக சற்று தொலைவில் இருந்து செருப்பு ஒன்று பறந்து வந்து நடிகர் விஜய்யின் முதுகு பக்கம் விழுந்தது.

பெண்கள் அணியும் செருப்பை தூக்கி விஜய்யை நோக்கி வீசியது யார் ? என்று சர்ச்சை எழுந்த நிலையில், இதனை பெரிது படுத்தாமல் விஜய் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார்

மறு நாள் வெள்ளம் பாதித்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து தன் கைப்பட நிவாரண பொருட்களை வழங்கினார் விஜய்

செருப்பு வீச்சு சம்பவம் நடந்து 8 தினங்கள் கடந்த நிலையில் , விஜய் மீது செருப்பு வீசிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் அப்புனு என்பவர் புகார் அளித்துள்ளார்

அந்த புகாரில் விஜய் மீது அடையாளம் தெரியாத நபர் காலணியை கழற்றி எறிந்துள்ளார் என்றும் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் மனதை புண்படுத்திய இந்த செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி உள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விஜய் வருகையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு அவர் மீது செருப்பு வீசிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments