மெடிக்கல் உரிமையாளர் கொலை! மொட்டை மாடியில் இருந்து குதித்த 3 பேருக்கு மாவுக்கட்டு..! கை, கால் முறிந்ததாக போலீஸ் தகவல்
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் மெடிக்கல் கடை உரிமையயாளரை மாமூல் கேட்டு வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 3 பேரும், பதுங்கி இருந்த மொட்டை மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற போது கை கால்கள் முறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் மெடிக்கல் கடை உரிமையளர் வினோத்திடம், மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் தருமாறு மிரட்டியதாக ரவுடி சிலம்பரசன் என்பவனை பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மர்ம கும்பலால் மெடிக்கல் கடை உரிமையாளர் வினோத் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் ரவுடி சிலம்பரசனின் கூட்டாளிகள் இருவர் மாத்திரை வாங்குவது போல வினோத்தின் மெடிக்கல் கடைக்கு வந்து நோட்ட மிட்டு சென்றது தெரியவந்தது.
அதனை வைத்து விசாரணையை முன்னெடுத்த போது, மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், வினோத் சாட்சி சொன்னால், தன்னால் ஜெயிலில் இருந்து வெளியே வர இயலாது என்பதால் கூட்டாளிகளை அனுப்பி தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு ரவுடி சிலம்பரசன் மிரட்டியதாகவும், வினோத் முடியாது என்று மறுத்ததால் இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புளியந்தோப்பை சேர்ந்த கார்டன் சரத் என்பவரை அழைத்து வந்து சிலம்பரசனின் உறவினரான சூர்யாவும், கூட்டாளி திருவேற்காடு மணிகண்டனும் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் மண்ணிவாக்கத்தில் உள்ள பாழடைந்த் கட்டிடம் ஒன்றில் மொட்டை மாடியில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
அந்த கட்டிடத்தில் ஏறி அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்ற போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதறகாக 3 பேரும் மொட்டை மாடியில் இருந்து குதித்துள்ளனர்.
குதித்த வேகத்தில் இருவருக்கு கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சித்ரா என்று காதலியின் பெயரை பச்சை குத்தியவனுக்கு வலது கையிலும் எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார் அவர்களை மீட்டு தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து 3 பேருக்கும் மாவுக்கட்டு போட்டு விட்டதாக தெரிவித்தனர்.
மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வினோத்தை கொடூரமாக கொலை செய்ய வேண்டும், அப்போது தான் நம் மீது இருக்கும் பயம் மக்களுக்கு போகாது என்று சிலம்பரசன் கூறியதால், வினோத் மெடிக்கல் ஷாப் மூடிவிட்டு வரும் வரை சாலையில் காத்திருந்து கொலை செய்ததாக சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
மாவுக்கட்டுடன் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி வினோத் என்பவனை தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுருத்தி பணம் பறிக்கும் ரவுடிகள் மீது போலீசார் இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments