ஜப்பானில் 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இஷிகாவா பகுதியை தாக்கிய சுனாமி
அடுத்தடுத்து நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஜப்பான் நாட்டின் கடற்பகுதியை சுனாமி பேரலை தாக்கியுள்ளது.
ஜப்பானின் மேற்கு கடற்பகுதியில் முதலில் ரிக்டர் அளவையில் 6 புள்ளி 2-ஆக பதிவான நில நடுக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பின்னதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அதில் ஒன்று 7 புள்ளி 6 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாகவும் ஜப்பான் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
90 நிமிட இடைவெளியில் மொத்தம் 21 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், இதனால் இஷிகவா, டொயாமா, நிகாடா போன்ற பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் ஜப்பான் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடற்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து இஷிகாவா கடற்கரைப் பகுதியில் ஒரு மீட்டர் அளவுக்கு மேல் சுனாமி பேரலை எழுந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடலோர பகுதி மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு உயரமான கட்டிடங்களின் மேல் தங்க வைக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன. டோக்கியோ - இஷிகாவா இடையிலான புல்லட் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை அறிவித்துள்ள இந்திய தூதரகம், உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது
Comments