புதிய பாய்ச்சலுடன் புத்தாண்டை தொடங்கிய இந்தியா..! வெற்றிகரமாக ஏவப்பட்ட சி-58!!

0 1492

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட், எக்ஸ்போசாட் மற்றும் 11 செயற்கைக்கோள் அவற்றின் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தியது.

2024-இன் முதல் நாள்..! காலை சரியாக 9 மணி 10 நிமிடங்கள்..! 25 மணி நேரம் கவுண்ட் டவுன் நிறைவடைந்து ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்.

பூமியின் கீழ் சுற்றுப்பாதைக்கு சுமார் 650 கிலோ மீட்டர் தொலைவில் எக்ஸ்போசாட் செயற்கைகோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது, பி.எஸ்.எல்.வி. சி-58.

எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சேட்டிலைட் என்பதன் சுருக்கமான எக்ஸ்போசாட் 5 ஆண்டுகள் வரை செயலில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட எக்ஸ்போசாட், பிரபஞ்சம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறியவும் அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவும் அத்யாவசியமான கருந்துளைகளையும், எக்ஸ் கதிர்களை வெளிப்படுத்தும் குவாசர், பெரும் வீண்மீன் வெடிப்பான சூப்பர்நோவா, விண்மீன் வெடிப்பின் எச்சமான நியூட்ரான் விண்மீன்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ய உள்ளது.

ஆயுட்காலம் முடிவடைந்த விண்மீன் ஒன்று, தன் எடையின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடிக்கும்போது உருவாவதே கருந்துளை. அளப்பரிய ஈர்ப்பு விசை கொண்ட கருந்துளையில் இருந்து ஒளிகூட வெளியேற முடியாது என்பதால் அவற்றைப் காண முடியாது. எனவே அவற்றை ஆராய சிறப்புக் கருவிகள் தேவை. கருந்துளைகளில் இருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து பிரபஞ்சத்தை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ள எக்ஸ்போசாட் உதவும். இத்தகைய செயற்கைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்படுவது உலகிலேயே இதுதான் இரண்டாவது முறையாகும். இதற்கு முன், 2021 டிசம்பரில் நாசா மற்றும் இத்தாலிய விண்வெளி முகமை இணைந்து ஐ.எக்ஸ்.பி.இ. என்றழைக்கப்படும் இதே போன்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இருந்தது.

இதுதவிர, திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள் பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்ப வெப்ப நிலையை அறிந்து கொள்வதற்காக வடிவமைத்துள்ள வெசாட் செயற்கைக்கோளையும் அதன் சுற்று வட்டப்பாதையில் பி.எஸ்.எல்.வி. சி-58 நிலை நிறுத்தியது. இதுதவிர, வெளிநாடுகளை சேர்ந்த 10 செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-58 விண்ணில் நிலைநிறுத்தியது.

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சோமநாத், இந்தாண்டின் 12 மாதங்களில் குறைந்தபட்சம் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments