அலைய விட்ட நிறுவனம்..! சில்லரையை எண்ண விட்ட பஞ்சாயத்து தலைவர்...!!

0 1650

சர்வீஸுக்கு விடப்பட்ட காரை குறித்த நாளில் கொடுக்காமல் வாரக்கணக்கில் இழுத்தடித்ததால் விரக்தி அடைந்த ஊராட்சிமன்ற தலைவர் ஒருவர், டொயோட்டா நிறுவனத்துக்கு, சர்வீஸ் கட்டணத்தை சில்லரை காசுகளாகவும், 10 ரூபாய் 20 ரூபாய் நோட்டுக்களாகவும் மூட்டை கட்டி கொடுத்ததால் ஊழியர்கள்  நொந்து போயினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த தொழுதாவூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார் அருள் முருகன். தனது இனோவா காரை சர்வீஸ் செய்வதற்காக பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஹர்ஷா டொயோட்டா கார் கம்பெனியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடுத்துள்ளார் அருள் முருகன்.

பழுதை ஓரிரு நாட்களில் சரி செய்த நிறுவனம், செராமிக் பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறி
பல நாட்கள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. காரை எடுத்துக் கொள்ளலாம் என நிறுவனம் கூறியதால் நேரில் சென்ற பிறகு கார் தற்போது தயாராக இல்லை என்று கூறி அருள்முருகனை 3 முறை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதன் பிறகு, கார் தயாராக இருப்பதாகவும் 36 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டுமென கார் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது. தன்னை கடுப்பேற்றிய நிறுவனத்தை வெறுப்பேற்ற முடிவு செய்த அருள் முருகன், சர்வீஸ் கட்டணத்தை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாகவும் மற்றும் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகளாக ஒரு துணி மூட்டையில் கட்டி எடுத்துச் சென்றார்.

அந்த துணி மூட்டையை பிரித்து சில்லரைகளை அங்குள்ள டேபிளில் கொட்டிய அருள்முருகன், தன்னை அலைக்கழித்ததற்காகவே இந்த சில்லரைகளை தருவதாகவும் இதனை எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

அருள்முருகனை கார் விற்பனை நிறுவனம் சமாதானப்படுத்த முயன்ற போதும், பில் தொகைக்கு இதுதான் பணம் இதனைத் தான் பெற்றுக் கொள்ள வேண்டுமென உறுதியாகக் கூறினார் அருள்முருகன்.

வேறு வழியின்றி நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு காசாக எண்ணி தொகையை சரி பார்த்துக் கொண்டனர். தனக்கு நேரிட்டது போன்ற சங்கடம் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு நாணயங்களை வழங்கியதாக தெரிவித்தார் அருள்முருகன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments