அண்ணா.. செல்ஃபி போதும்.. நிவாரண மெல்லாம் வேணாம்.. தம்பி எங்க இருக்க..? தேடிய பாட்டி..! நடிகர் விஜய் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்

0 1468

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று  ரசிகர்மன்ற நிர்வாகிகளால் வேண் மூலம் அழைத்து வரப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் நேரடியாக நிவாரண உதவிகளை வழங்கினார். விஜய்யை காணும் ஆவலில் முண்டியடித்தவர்களால் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்

தூத்துக்குடி மற்றும் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்களுக்கு தெரிந்த 400 பேரை தேர்ந்தெடுத்து தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வேண்கள் மூலம் அழைத்துச்சென்றனர்

வெள்ளத்தில் பலியான தனது மன்ற நிர்வாகியின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் விஜய் வழங்கினார்

பெண்கள் விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாக காணப்பட்டனர். பெண்கள் அமர்ந்திருந்த பகுதிக்கே சென்று மளிகை பொருட்கள் மற்றும் காய்கறியுடன், போர்வைகளையும் விஜய் நேரடியாக வழங்கினார்

அப்போது ஒரு பெண் விஜய்யை அண்ணா என்று கட்டிப்பிடித்து தனது கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்

ரசிகர்கள் விஜய்யை காண முண்டியடித்ததாலும் டோக்கன் வைத்திருப்பவர்களை மேடைக்கு வரவழைத்து நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டார்

நிவாரணம் பெற மேடைக்கு வந்த மூதாட்டி ஒருவர், கலைந்த தலைமுடியுடன், மீசை இல்லாமல் இருந்த விஜய்யை அடையாளம் காண இயலாமல் குழம்பினார். அவரை அன்போடு அழைத்து விஜய் நிவாரண உதவி வழங்கினார்

அந்த மூதாட்டி விஜய்யை கன்னத்தை பிடித்து கிள்ளி கொஞ்சிக் கொண்டிருக்க... அவரை அங்கிருந்து கையை பிடித்து இழுத்து செல்ல தொடங்கினர். இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது. உடனடியாக விஜய் அங்கிருந்தவர்களை கூல் கூல்... என்று கூறி சமாதானப்படுத்தினார்

விஜய் நிவாரண பொருட்களை தூக்கிக்கொடுத்துக் கொண்டிருந்த போது, ரசிகை ஒருவர் செல்ஃபி எடுக்க மேடைக்கு வந்தார், அவரிடம் பொருட்கள் வேண்டாமா என்று விஜய் கேட்க, உங்களுடன் செல்ஃபி எடுத்தால் போதும் என்று செல்போனை தூக்கி படம் பிடித்துவிட்டு சென்றார்

பர்தா போட்டு வந்த இளம் ரசிகை ஒருவர் தனது குடும்பத்துடன் நின்று செல்ஃபி எடுத்த பின்னர் நிவாரண பொருட்களை பெற்றுச்சென்றார்

மற்றொரு பெண் ஒருவர் விஜய்யை வாழ்த்தி கையை உயர்த்தி கோஷம் போட்டு உற்சாக ஆட்டம் போட்டார்

பெண் ஒருவர் கையை பிடித்து முத்தமிட்டு நிவாரணம் பெற்றுச்சென்றார்

இளம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயல அவரை வேகமாக விரட்டி விட்டனர்

மற்றொரு ரசிகரை விரட்ட முயல முறைத்த அவர், விஜய்யுடன் செல்பி எடுத்த பின்னரே நிவாரண பொருட்களை பெற்றுச்சென்றார்

தனக்கு முன்பாக கோஷமிட்டுக் கொண்டே இருந்த ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக அனைவருடனும் இருப்பது போன்று பொது செல்ஃபி ஒன்றை ரசிகர்கரின் செல்போனில் எடுத்துக் கொடுத்தார்

மாலை விமானத்துக்கு நேரமானதால் மற்றவர்களுக்கு நிர்வாகிகளை நிவாரணம் வழங்கசொல்லிவிட்டு விஜய் புறப்பட்டார்.

வெளியே அவரை பார்க்க திரண்டிருந்த ரசிகர்கள் முண்டியடித்ததால், நிவாரணம் பெற வந்த இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர்

அருகில் நின்றவர்கள் இரக்கப்பட்டு கூட்டத்தில் சிக்கியவர்களை தூக்கி விட்டதால் அவர்கள் உயிர்தப்பினர்

இவ்வளவு களேபாரங்களுக்கு இடையே விஜய் விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டுச்சென்றது தெரியாமல், விஜய் தங்களுக்கு நிவாரணம் வழங்க வருவார் என்ற நம்பிக்கையுடன், வெள்ளப்பாதிப்புக்குள்ளான தூத்துக்குடி 3 ஆம் மைல் பகுதியில் ஏராளமான பெண்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக இலவு காத்த கிளிகளாக சாலையோரம் காத்திருந்தது குறிப்பிடதக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments