பல்லவர்மேடு யாருக்கு.... ரவுடிகளை சுட்டுத்தூக்கிய போலீஸ்..! 15 ஆண்டுகளில் 13 கொலையாம்..!! ரவுடிகளுக்கு கட்டம் கட்டும் போலீசார்!

0 1634

காஞ்சிபுரத்தில் பட்டபகலில் பிரபல ரவுடியை கடை வீதியில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகள் 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஞ்சிபுரத்தில் தாதாவாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீதர் தனபால் மரணத்துக்கு பின்னர் அவரது இடத்தை பிடிக்க பல்லவர் மேடு ரவுடி குழுக்கள் இடையே பலத்த போட்டி நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் 3 கொலைகள், ஆள்கடத்தல், கஞ்சா சப்ளை என 39 வழக்குகளுடன் தன்னை முக்கிய ரவுடியாக காட்டிக் கொண்ட பிரபா என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் என்கிற சரவணனை சில மாதங்களுக்கு கைது செய்து மாவுக்கட்டு போட்டு விட்ட போலீசார், அவன் வைத்திருந்த கார் பைக் உள்ளிட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபா, காவல் நிலையத்தில் கெயெழுத்திட நடந்து செல்வதை நோட்டமிட்ட மர்மக்கும்பல் ஒன்று, புதுப்பாளையம் கடை வீதியில் வைத்து பட்டபகலில் பிரபாகரனை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு காரில் ஏறி தப்பியது.

சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபாவுக்கு பயந்து சென்னையில் பதுங்கி இருந்த ரவுடி ரகுவரன் என்பதும் பல்லவர் மேட்டில் மாமூல் ஆதிக்கத்தை நிலை நிறுத்த இந்த கொலை சம்பவத்தை அவன் நிகழ்த்தியதும் தெரியவந்ததாக கூறிய போலீசார், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்தனர்.

ரவுடி ரகுவரனும் அவனது சிறை கூட்டாளி அசேன் என்கிற கருப்பு அசேனும் காஞ்சிபுரம் இந்திரா நகர் பழைய ரயில்வே கேட் அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் எஸ்.எஸ்.ஐ சுதாகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.

தாங்கள் பல முறை எச்சரித்தும் சரண் அடைய மறுத்த ரவுகள் இருவரும் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்ப முயன்ற போது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குண்டடிபட்டு கீழே விழுந்த ரகுவரன் மற்றும் கருப்பு அசேனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது இருவரும் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

கொலையாளிகள் வெட்டியதில் படுகாயம் அடைந்தாக கூறப்படும் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் , டி.ஐ.ஜி பொன்னி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 375 ரவுடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறினார்.

தொழிற்சாலைகளில் ரவுடிகள் யாரேனும் மாமூல் கேட்டு மிரட்டும் போது, அது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை கண்டறியும் நவீன தொழில்நுட்பம் போலீசாரிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு ஜவுளிக்கடைகள், ஸ்ரீபெரும்புதூர் வட்டார தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கில் மாமூல் பெறலாம் என்ற கணக்கில் ரவுடிகள் தங்களை முன்னிலைப்படுத்த அடுத்தடுத்து கொலை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரகுவரன் மீது 3 கொலை உள்ளிட்ட 7 வழக்குகளும், கருப்பு அசேன் மீது 2 கொலை உள்ளிட்ட 6 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆண்டுகளில் பல்லவர் மேடு பகுதியில் யார் தாதா என்பதற்காக 13 கொலை நிகழ்ந்திருப்பதாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments