பிரசவ அறைக்குள் வெள்ளம் தாயையும் சேயையும் காத்த துணிச்சலான செவிலித்தாய்..! செல்போன் லைட்டில் பிரசவம் பார்த்தார்

0 914

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு சமுதாய நல மையத்தின் பிரசவ அறைக்குள் மழை வெள்ளம் புகுந்த அன்று வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு செவிலியர் ஒருவர் செல்போன் டார்ச் உதவியுடன் பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிக் கொடுத்துள்ளார்

ஊரெல்லாம் வெள்ளம் ... நிறைமாதக் கர்ப்பிணியான தனது மனைவியை கையில் தூக்கிச்சென்று அரசு சமுதாய நல மையத்தில் உதவி கோரிய நிலையில்... மின்சாரம் இல்லாததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையையும், சேயையும் காப்பாற்றிக் கொடுத்த செவிலித்தாய் ஜெயலட்சுமி இவர் தான்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவரது மனைவி ரம்யா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரம்யாவுக்கு கடந்த 18-ந் தேதி காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, கனமழை பெய்து ஊரெங்கும் மழை நீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது

இதனால் ரம்யாவின் தாயார் பாத்திமா, அவரது தம்பி ஜேசுபால் மற்றும் உறவினருடன் அன்று காலையில் சரக்கு ஆட்டோவில் ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏரல் செல்லும் வழியில் உள்ள சூழைவாய்க்கால் சாலையில் வெள்ளம் அதிகமாக சென்றதால் ஆட்டோவில் செல்ல முடியவில்லை.

இதனால் ஜேசுபால், மனைவி ரம்யாவை தோளில் தூக்கிக் கொண்டும், அப்பகுதி மக்கள் சேர்ந்து கையை பிடித்து சேர்த்து கொண்டு தண்ணீரைக் கடந்து ஏரலுக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை, செவிலியர் ஜெயலட்சுமி மட்டும் இருந்தார். இதனால் என்ன செய்வதென்று குடும்பத்தினர் பரிதவித்தனர். மாலை 6 மணி அளவில் வெள்ளம் மருத்துவமனைக்கு உள்ளேயும் வந்தது.

அங்கிருந்த நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார். முழங்கால் அளவு தண்ணீர் வந்து கொண்டு இருந்தபோது, ரம்யாவுக்கு, செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்க தொடங்கியதாகவும், இரவு 7 மணிக்கு ரம்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், தாயையும் சேயையும் பத்திரமாக காப்பாற்றிக்கொடுத்ததாக தெரிவித்தார் ஜெயலட்சுமி

குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்ட தங்களுக்கு எதிர் வீட்டில் வசித்த இளைஞர் ஒருவர் உணவு கொடுத்து உதவியதாகவும், கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்ததாகவும் ஜெயலட்சுமி தெரிவித்தார்

வெள்ளம் வடியத் தொடங்கி 3 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து ரம்யா, குழந்தை மற்றும் குடும்பத்தினரை படகு மூலம் சிறுத்தொண்டநல்லூருக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த போலீசார் தங்களது வாகனத்தில் பட்டாண்டிவிளைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments