வி.ஏ.ஓ. அலுவலகத்திற்குள் புகுந்து தலையாரிக்கு வெட்டு.. கஞ்சா கும்பல் அட்ராசிட்டி..! நையப்புடைத்த உள்ளூர் மக்கள்

0 1830
வி.ஏ.ஓ. அலுவலகத்திற்குள் புகுந்து தலையாரிக்கு வெட்டு.. கஞ்சா கும்பல் அட்ராசிட்டி..! நையப்புடைத்த உள்ளூர் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கஞ்சா போதையில் வீடுகளை சூறையாடி, வி.ஏ.ஓ.வை தாக்கி, தலையாரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற 4 பேர் கும்பலை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வி.ஏ.ஓ அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய கஞ்சா கும்பலை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து வெளுத்துக்கட்டிய காட்சிகள் தான் இவை..!

ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தில் 4 நாட்களுக்கு முன் இறந்த ராஜாக்கனியின் இறுதிச் சடங்கின் போது ஆறுமுகம், முருகன் என்ற சகோதரர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும், உறவினர் வேதநாராயணன் எச்சரித்த நிலையில், போலீசார் வந்து போதை சகோதரர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

துக்க வீட்டில் வைத்து தங்களை திட்டிய உறவினர் வேதநாராயணன் என்பவரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக 4 நாட்கள் கழித்து , தங்கள் நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு ஆறுமுகம் மற்றும் முருகன் கஞ்சா போதையில் வேதநாராயணனின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த வேதநாராயணனை தாங்கள் கொண்டு வந்த கூர் மழுங்கிய அரிவாளால் வெட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த 4 வீடுகளின் முன்பக்க ஓடுகளை அரிவாளால் தட்டி உடைத்துக் கொண்டே பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர்.

அந்த 4 பேரும் கண்ணில் பட்டோரை எல்லாம் அரிவாளால் அடித்து விட்டு 2 பைக்குகளில் வேகமாக சென்ற போது, சிறிது தூரத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலகம் முன் சறுக்கி சாலையில் விழுந்தனர். வி.ஏ.ஓ. அலுவலகத்துக்குள் இருந்த தலையாரி துரையை பார்த்தனர். அவர் சொல்லித் தான் துக்க வீட்டுக்கு போலீஸ் வந்ததாக ஆறுமுகம் சொன்னதும், 4 பேரும் வி.ஏ.ஓ. அலுவலகத்துக்குள் புகுந்தனர்.

அரிவாளால் தலையாரி துரையை வெட்டிய அவர்கள், தடுக்க வந்த வி.ஏ.ஓ. முத்துகண்ணனையும் அரிவாளால் அடித்தனர். அங்கிருந்த மேஜைக்கு கீழே ஒளிந்து உயிர் தப்பினார் வி.ஏ.ஓ. முத்துகண்ணன்

அதற்குள் அங்கம் பக்கத்து மக்கள் வி.ஏ.ஓ. அலுவலகம் முன் திரண்டு போதையில் இருந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்

பெண்களும் தங்கள் பங்கிற்கு செருப்பு மற்றும் கட்டைகளால் அடித்து நொறுக்கினர். பின்னர் எப்போதும்வென்றான் போலீசாரை வரவழைத்து 4 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இத்தனை ரகளைகளுக்கும் 4 இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்ததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments