வாங்க பசங்களா.. வாங்க இப்ப தொங்குங்க பார்க்கலாம்... ஜன்னலை அடை.. படிக்கட்டில் நட..! அரசு பேருந்து நடத்துனர் அசத்தல்
காஞ்சிபுரம் பகுதிகளில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் ஜன்னலை பிடித்துக் கொண்டு படிக்கட்டில் தொங்குவதை தவிர்ப்பதற்காக ,பேருந்துகளில் பக்க வாட்டு ஜன்னல் பகுதிகளை இடைவெளி இல்லாமல் இரும்பு தகட்டால் அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அரசு பேருந்துகளின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு படிக்கட்டில் தொங்கும், அட்ராசிட்டி மாணவர்களின் செயலுக்கு தடை விதிக்கும் வகையில் ஜன்னலை இரும்பு தகடை பொருத்தி அடைக்கும் காட்சிகள் தான் இவை..!
தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச பயண பேருந்து அட்டை அளித்துள்ள நிலையில் இதனை சற்றும் உணராமல் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்தனமாக பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அவ்வப்போது விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளையும் , சில சமயம் உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகின்றது.
ஜன்னலை பிடித்து படிக்கட்டில் தொங்குவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் பணிமனையில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் இரு பகுதிகளிலும் தகரம் கொண்டு அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படிக்கட்டை யொட்டிய ஜன்னலின் பக்கவாட்டு பகுதியை பிடித்துக் கொண்டு தான் பேருந்துகளில் சாகச சேட்டைகளில் சில மாணவர்கள் ஈடுபடுகின்றனர். அந்த பகுதியில் கையால் பிடிப்பதற்கு வசதி இல்லாவிட்டால் எப்படி தொங்குவார்கள் ? என்று சிந்தித்து படிக்கட்டின் அருகில் இருக்கின்ற ஜன்னல் அடைக்கப்பட்டுள்ளதாக நடத்துனர்கள் தெரிவித்தனர்.
பள்ளி விடுமுறை முடிந்து வந்தால் தான் , சில மாணவ வேதாளங்கள் பழையபடி படிக்கட்டில் தொங்குவார்களா ? இல்லை சொல்பேச்சு கேட்டு உள்ளே ஏறுவார்களா ? என்பது தெரியவரும்..!
Comments