அன்பென்ற மழையிலே.. அகிலங்கள் நனையவே.. அதிரூபன் தோன்றினானே..!

0 930

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாட்டிகனில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை போப் ஃபிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.

புனித பேதுரு தேவாலயத்தின் முன் திரண்டிருந்த சுமார் 6500 பேர் முன்னிலையில் உரையாற்றிய போப், இன்றைக்கு நடக்கும் போர்கள் மூலம் அமைதியின் இளவரசரான இயேசு மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இயேசு பிறந்ததாக கருதப்படும் பெத்லெஹேம் நகரில் காஸா போர் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் கூட்டுப் பாடல் திருப்பலிக்குப் பின் இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு, குடிலில் அமைக்கப்பட்ட குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து குழந்தை இயேசுவின் சொரூபம் குடிலில் வைக்கப்பட்டது.

சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியின் போது மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை நடத்தப்பட்டது.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கேரளாவில் பழமைவாய்ந்த நிரணம் புனித மரியாள் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களிலும் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கோவாவிலும் நாகலாந்து, மிசோரம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments