தவறான உறவுக்குத் தடையாக இருந்த கணவன்.. வாட்சப்பில் திட்டம் தீட்டி தீர்த்துக்கட்டிய மனைவி...! வெளிநாட்டில் இருந்தவாறு கொலைக்குத் திட்டம்

0 2124
தவறான உறவுக்குத் தடையாக இருந்த கணவன்.. வாட்சப்பில் திட்டம் தீட்டி தீர்த்துக்கட்டிய மனைவி...! வெளிநாட்டில் இருந்தவாறு கொலைக்குத் திட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, தனது ஆண் நண்பரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்தவாறே வாட்சப் மூலம் கொலைக்கான திட்டம் தீட்டிய ஆண் நண்பரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்...

காட்டுமன்னார்கோவிலில் இருந்து மேல வன்னியூர் செல்லும் சாலையில் கடந்த 19ஆம் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்த வெள்ளத்துடன் கிடப்பதாக குமராட்சி காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் இறந்து போனவர் மேல வன்னியூர் தெற்குதெருவைச் சேர்ந்த மாமல்லன் என்பது தெரியவந்தது.

சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமல்லன் மனைவி நாகலட்சுமியிடம் விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், தனது தவறான உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், திட்டம்போட்டு அவரைக் கொன்றது தெரியவந்தது. நாகலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த, தங்கபாண்டியன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் தங்கபாண்டியனுடன் நாகலட்சுமி அடிக்கடி பேசி வந்த நிலையில், விஷயம் தெரியவந்து மாமல்லன் மனைவியைக் கண்டித்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாத நாகலட்சுமி, தங்கபாண்டியனுடன் வீடியோ காலில் பேசுவதையும் வழக்கமாக்கியுள்ளார்.

இரண்டு குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி அறிவுரை கூறியும் கேட்காததால், நாகலட்சுமியின் செல்போன்களை வாங்கி உடைத்துப் போட்டுள்ளார் மாமல்லன். அப்படி இதுவரை 4 செல்போன்களை அவர் உடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மீது ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி, விரைவில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரவிருக்கும் தங்கபாண்டியனிடம் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என வாட்ஸ் அப் கால் மூலம் கூறியுள்ளார். தங்கபாண்டியனும் ஊரில் இருக்கும் தனது நண்பர்கள் இளம் வேந்தன், ராஜகுரு ஆகியோரை ஏற்பாடு செய்து மாமல்லனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் ராஜகுரு சட்டக்கல்லூரி மாணவன் என்று கூறப்படுகிறது.

மாமல்லனின் வழக்கமான செயல்பாடுகளை இரண்டு மாதங்களாக ரகசியமாகக் கண்காணித்து, 19ஆம் தேதி அவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது பின் மண்டையில் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. நாகலட்சுமி உட்பட மூவரையும் கைது செய்த போலீசார், வெளிநாட்டில் உள்ள தங்கபாண்டியனைப் பிடிக்க இந்திய தூதரகம் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments