கோவிலில் பெண்களிடம் வம்பு.. நோயாளியின் மண்டை உடைப்பு.. போலீஸை மிரளவிட்ட போதையன்..! கேள்விக்குறியான பாதுகாப்பு
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் விழாவில் பெண்களிடம் வம்பு செய்த கஞ்சா போதையன் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மண்டையை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கழுத்தில் காயத்துடன் கோழி திருடன் போல விழித்துக் கொண்டு படுத்துக் கிடக்கும் இவர் தான் கஞ்சா குடிக்கி போதை இளைஞர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை ராஜநாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் போதையில் பெண்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசாரும் அந்த இளைஞரை பிடிக்க முயன்ற பொழுது, போதை இளைஞர் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு போதை இளைஞருக்கு கழுத்தில் 11 தையல் போடப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மருத்துவர் மற்றும் போலீசார் விசாரணை நடத்திய பொழுது அந்த இளைஞர் தனது பெயர் மற்றும் ஊர் குறித்த விபரங்களை கூற மறுத்து விட்டான்.
போலீசார் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட போதையன், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் என்ற முதியவரையும் தூக்கிபோட்டு கடுமையாக தாக்கினான்.
அதில் முதியவர் சீனிவாசனின் மண்டை உடைந்தது அப்போது மருத்துவமனையில் இருந்தவர்கள் திடீரென அச்சமடைந்து அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தனர். முதியவர் சீனிவாசனுடன் இருந்த அவரது மருமகன் ஐயப்பன் மற்றும் மகள் ஆகியோர் இரவு உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்று வருவதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது
இந்த சம்பவம் நடந்த நிலையில் சீனிவாசனை தாக்கிய போதை இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை புற காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லை என்றும் தாக்குதல் சம்பவத்தை மருத்துவமனை ஊழியர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்
நோயாளிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து போதை இளைஞர் போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கஞ்சா மற்றும் மது போதையால் உந்தப்பட்டு சிலர் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுவதால் கஞ்சா விற்பனையை போலீசார் இருப்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
Comments