தரைத்தள வீடுகள் காலி..! புலம்பும் ஹவுஸ் ஓனர்கள்..! சென்னை வெள்ள பரிதாபங்கள்!!

0 2028

சென்னையில் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசை, ஆசையாக அதிக விலை கொடுத்து வாங்கிய தரைத்தள வீடுகளுக்கு வெள்ளத்திற்கு பிறகு யாரும் வாடகைக்கு வராததால் இ.எம்.ஐ செலுத்தக்கூட வழி தெரியவில்லை என வீட்டு உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

மிக்ஜாம் புயலின் போது பெய்த கனமழையால் உருவான வெள்ளம் சென்னையின் பல பகுதிகளை சூழ்ந்தது. தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் டி.வி., ஃபிரிட்ஜ், சோஃபா உள்ளிட்டவை சேதமடைந்தன. கார்களும் டூவீலர்களும் பழுதடைந்தன.

வேளச்சேரி பகுதியில் வெள்ளத்திற்கு பிறகு தரைத்தளங்களில் வசித்த வாடகைதாரர்கள் வீடுகளை காலி செய்து விட்டதால், முதலீட்டுக்காக கடனில் வாங்கிய வீடுகளுக்கு ஈ.எம்.ஐ கூட கட்ட முடியவில்லை என தெரிவித்தனர் வீட்டு உரிமையாளர்கள் சிலர். அதிலும் தரை தளங்களில் வீடு இருந்தால் கூடுதல் வாடகை கிடைக்கும் என்று அதிக பணம் கொடுத்து வாங்கிய வீடுகள் காலியாக இருப்பதாகவும், தரைத்தளத்தில் வீடு என்று கூறினாலே, வாடகைக்கு வீடு கேட்டு வருவோர் பதில் கூட கூறாமல் திரும்பிச் சென்று விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்டியில் இருந்து வெள்ள நீரும், ஆலந்தூர் பகுதியில் இருந்து வரும் வீராங்கல் ஓடை நீரும் வேளச்சேரிக்கு வருவதால் கனமழை பெய்யும் ஒவ்வொரு முறையும் வெள்ளம் தேங்கி வெள்ளசேரியாகி விடுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றி கேட்ட போது, வேளச்சேரி பகுதியில் வெள்ளம் வடிவதற்காக, ஈஞ்சம்பாக்கம் கோல்டன் பீச் பகுதியில் புதிய முகத்துவாரத்தை அமைப்பதற்காக 2016-ம் ஆண்டு முதலே திட்டமிடப்பட்டு வந்தாலும், நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வெள்ள நீரை விரைந்து வெளியேற்றும் வகையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து நீலாங்கரை பகுதியில் பக்கிங்காம் கால்வாய் வரை புதிய வடிகால் அமைக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments