அப்போ கொலைகார காதலர்கள் இப்போ காதல் தம்பதியர்களாம்..! 10 வருடம் தேடிப்பிடித்த போலீஸ்..! கணவரை கார் ஏற்றிக் கொன்ற மனைவி

0 1718

10 வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக ஊழியரை கார் ஏற்றி கொலை செய்தவழக்கில் கைதாகி காதலனுடன் சிறை சென்ற பெண், ஜாமீனில் வெளி வந்ததும் காதலனுடன் தலைமறைவாகி கேரளாவில் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்தி வந்த கொலைகார காதலர்கள் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவர் கடந்த 30- 8- 2013 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கார் விபத்தில் பலியானதாக கூறப்பட்டது.
இதனை திறன் பட புலனாய்வு செய்த அப்போதைய சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்
ராஜாராம், தகுந்த சாட்சியத்துடன் நடந்தது விபத்து இல்லை, திட்டமிட்ட கொலை என்பதை கண்டறிந்தார்.

சம்பத்தின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியதாகவும், இதற்கு இடையூறாக இருந்த கணவர் சம்பத்தை , முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர்பாஷா என்பவரின் உதவியுடன் கார் ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து என நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் , நீதிமன்ற பினை பெற்று வெளியே சென்ற 3 பேரும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால், மூவருக்கும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. 10 ஆண்டுகளாக பிடியானையை நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் இருந்ததால் வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாத நிலையில் இருந்தது .

இந்நிலையில் ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலை மறைவு குற்றவாளிகளான 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்

தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம் , மங்கலம்பேட்டை, சென்னை கன்னியாகுமரி , பெங்களூரு போன்ற இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஓட்டுனர் அமீர் பாஷவை தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் , கிரண் ரூபிணி ஆகியோர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கணவன் மனைவி போல தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றதும் உஷாரான இருவரும் அங்கிருந்து பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர்.
பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், பெங்களூர் சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடூர கொலையாளிகளாக பார்க்கப்பட்டவர்கள், ஜாமீனில் வந்து தலைமறைவானதும் பெயரை மாற்றிக் கொண்டு வேறு மாநிலத்தில் கணவன் மனைவியாக வசித்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்ட இருப்பது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments