கும்மிருட்டில் கேட்ட பெண்ணின் குரல்... படகில் சென்று சிக்கிய தீயணைப்பு வீரர்கள்...
தூத்துக்குடி அருகே, கும்மிருட்டில் தூரத்தில் கேட்ட பெண்ணின் குரலைக் கேட்டு மீட்கச் சென்று படகோடு வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 3 தீயணைப்பு வீரர்களும், படகில் இருந்த 6 பேரும் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக திரும்பியதன் திக்... திக்... பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது கரையைக் கடந்து கரையோர பகுதிகளுக்குள் புகுந்தது. மழையால் குளம், கண்மாய்களும் நிரம்பி கரைகளை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்ததால், மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவத்தினர், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கி படகுகள் மூலமாக மீட்டு வருகின்றனர். அதன்படி, ஆழ்வார் திருநகரி ரத்தினபுரி பகுதியில் 6 பேரை தீயணைப்பு துறையினர் படகில் சென்று மீட்டனர்.
படகு கரை திரும்பிக் கொண்டிருந்த போது அங்குள்ள ஓடையின் மறுபக்கம் இருந்து ஒரு பெண்ணின் அபயக் குரல் கேட்டது. இருட்டாக இருந்த அப்பகுதிக்கு சென்ற போது ரயில்வே பெண் கேட் கீப்பரும், அவரை காப்பாற்றுவதற்காக வந்திருந்த அவரது கணவரும் வெள்ளத்தில் சிக்கியிருந்தது தெரிய வந்தது. அவர்களை படகில் ஏற்றிக் கொண்டு கரை திரும்புவதற்குள் ஓடையிலும் தண்ணீர் அதிகமாக வந்ததோடு, இருட்டியதால் போதிய வெளிச்சமின்றி படகு எங்கே செல்கிறது என்றே தெரியாத நிலை உருவானது.
தீயணைப்பு வீரர்கள் 3 பேர், மீட்கப்பட்ட பொதுமக்கள் 6 பேர் கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டது. ஒரு கட்டத்தில் அதிக இருட்டு காரணமாக தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், கடுமையான இருட்டில் படகை செலுத்திய தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் சிக்கியிருந்த மற்றொரு ரயில்வே ஊழியரை மீட்டு அவர் வைத்திருந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
2 ஓடைகளை அடுத்தடுத்து கடக்க வேண்டியிருந்ததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் மீட்பு பணி மிகுந்த சவாலாக இருந்ததாக தெரிவித்தனர் தீயணைப்புத் துறையினர்.
தேடப்பட்டு வந்தவர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கரை திரும்பிய பின்னரே சக தீயணைப்பு வீரர்களுக்கும், உறவினர்களை காணாமல் பரிதவித்தவர்களும் நிம்மதி அடைந்தனர்.
Comments