திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் : முதலமைச்சர் ஸ்டாலின்
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமுள்ள வட்டங்களில் குடும்ப அட்டைக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவ்விரு மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ள வட்டங்களிலும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் தலா ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணமாக தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மழை, வெள்ளத்தில் இறந்த மாடுகளுக்கு தலா 37,500 ரூபாயும் ஆடுகளுக்கு தலா 4,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணப்பொருட்களை வழங்கினார். அப்போது, சிறுமி ஒருவர் தனது சேமிப்பு உண்டியலை நிவாரண நிதிக்கு அளித்தார். அதை பெற்றுக் கொண்டு அந்த சிறுமிக்கு முதலமைச்சர் சாக்லெட் வழங்கினார்.
அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மறவன்மடம், குறிஞ்சி நகர் போல்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காலையில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைவும் முதலமைச்சர் வழங்கினார்.
Comments