3 ஆண்டு சிறை.. 50 லட்சம் அபராதம்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

0 1096

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கடந்த 2011-இல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் இருந்து இருவரையும் விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 2016-இல் விடுவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 2017-இல் மேல் முறையீடு செய்தது. அதன் மீது கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், வருமானத்துக்கு அதிகமாக 64 புள்ளி 9 சதவீதம் அதிக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என்று அறிவித்து, தண்டனை விவாரங்களை வியாழனன்று அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

இதன்பேரில் பொன்முடி மற்றும் அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆஜராயினர். தங்களது வயது மற்றும் மருத்துவக் காரணங்களில் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு இருவரும் நீதிபதியிடம் வாய்மொழியாக கேட்டுக்கொண்டனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் சமூகத்தின் மீது ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை செலுத்தாவிட்டால் 6 மாத சிறை தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தார்.

பொன்முடி மற்றும் அவரது மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய ஜனவரி 22-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அன்றைய தினம் சரணடையாவிட்டால் விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments