ஜவுளிக் கடையில் கத்தியை காட்டி மிரட்டிய வழிப்பறி கொள்ளையர்களை 35 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த போலீசார்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஜவுளிக் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டிய வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேரை, சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனிப்படை போலீஸார் துரத்திப் பிடித்தனர். துணிக்கடையில் புகுந்த சிலர் 150 ரூபாய் மதிப்புள்ள டீசர்ட்டை கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த தகவலின்பேரில், போலீஸார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அவர்கள் வந்த காரில் தப்பினர். அவர்களைத் தனிப்படை போலீசார் விரட்டிச் சென்றனர்.
சோதனைச் சாவடி தடுப்புகளை இடித்து விட்டு எங்கும் நிற்காமல் சென்ற கார், பனங்குடி அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. காரை நிறுத்திவிட்டு வயலுக்குள் ஓடிய 5 பேரையும் போலீசார் மடக்கிபிடித்தனர்.
அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் டாட்டா சுமோவில் சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த மதுரையைச் சேர்ந்த கண்ணன், பக்ருதீன், பாண்டி, சிவகங்கையைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் தஞ்சையை சேர்ந்த ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments