கிரிக்கெட் மட்டையால் மாநகராட்சி ஊழியரின் மண்டையை பிளந்த பா.ம.க. நிர்வாகி...!
நிலத்தை மண் கொட்டி சமன்படுத்திய தகராறில் மாநகராட்சி ஊழியர் உள்பட 6 பேரை வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கி விட்டு தலைமறைவான பா.ம.க பிரமுகரை மாமல்லபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பெரிய நெம்மேலி பகுதியைச் சேர்ந்தவரான முருகன். சென்னை மாநகராட்சியில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகியான ஏகாம்பரம் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் டிப்பர் லாரியில் மண் கொண்டு வந்து கொட்டி சமப்படுத்தி உள்ளார் முருகன். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் தனது மனைவி முத்தமிழ்செல்வி, மகள்கள் நந்தினி, இலக்கியா, தம்பி மணிகண்டன், அவரது மனைவி மனோன்மணி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்து முருகன் பேசிக் கொண்டிருந்த போது, தனது மகன்களுடன் முருகனின் வீட்டிற்குச் சென்று ஏகாம்பரம் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இருதரப்புக்கு இடையேயான வார்த்தை மோதல் அடிதடி நிலைக்குச் செல்லவே ஏகாம்பரம் தரப்பினர் கையோடு கொண்டுச் சென்ற கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
முருகன் உள்ளிட்ட 6 பேரும் படுகாயத்தோடு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், முருகனின் தலையில் 30 தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இரு தரப்பினரும் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த மாமல்லபுரம் போலீஸார், பா.ம.க நிர்வாகி ஏகாம்பரம் அவரது மனைவி மற்றும் மகன்கள் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
Comments