ஹவாலா பணம் ரூ.20 லட்சத்தை போலீஸாக நடித்து வழிப்பறி.. 4 மணி நேரத்தில் 5 பேர் சிக்கினர்..!!
ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கருதி சென்னையில் போலீஸாக நடித்து இளைஞர் ஒருவரிடமிருந்து 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கடலூரைச் சேர்ந்த 5 பேர் கும்பலை 4 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெருங்களத்தூரில் ஷூ கடையில் வேலைப் பார்த்து வரும் சிராஜூதீன், பர்மா பஜாரில் கடை ஒன்றிலிருந்து 20 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு கடற்கரை ரயில் நிலையத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அவரை வழிமறித்த 5 பேர் தாங்கள் போலீஸ் எனவும், ஹவாலா பணம் கடத்திச் செல்கிறீர்களா எனக் கூறி அந்த பணத்தை பறிமுதல் செய்ததோடு, அவர் வைத்திருந்த 2 செல்ஃபோனையும் பறித்துள்ளனர்.
அவர்களின் நடவடிக்கை சிராஜூதீனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, சக பயணிகள் உதவியோடு அவர்களில் ஒருவரான கடலூரைச் சேர்ந்த பாலச்சந்திரனை மடக்கிப் பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார்.
பிடிபட்ட பாலச்சந்திரனிடம் டி.எஸ்.பி., ரமேஷ் நடத்திய விசாரணையில், தப்பி ஓடிய 4 பேரும் கடலூரைச் சேர்ந்த தமிழ்மணி, சிவா, பிரகாஷ், சதீஷ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் போலீஸார்.
செல்ஃபோன் சிக்னல் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்த பிரகாஷ், சதீஷை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கூடுவாஞ்சேரியில் வைத்து சிவாவை கைது செய்து அவரிடமிருந்த 5 லட்சம் ரூபாயும், கூடுவாஞ்சேரியில் இருந்து மீண்டும் கடற்கரைக்கு ரயிலில் வந்துக் கொண்டிருந்த தமிழ்மணியை கைது செய்து 15 லட்சம் ரூபாயும் மீட்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு பர்மா பஜாரில் ஒரு கடையில் தனது செல்போஃனிற்கு டெம்பர் கிளாஸ் மாற்றச் சென்ற தமிழ்மணி, அந்த கடையில் கட்டுக்கட்டாக பணம் கைமாறுவதை பார்த்துள்ளார்.
சில நாட்கள் கழித்து மீண்டும் அதே கடைக்கு சென்ற போதும் பணம் கைமாறுவதை கவனித்தார் தமிழ்மணி. இது சட்டவிரோத ஹவாலா பணமாக இருக்கலாம் எனவும், இதனை வாங்கிச் செல்பவரிடமிருந்து வழிப்பறி செய்தாலும் போலீஸில் புகார் அளிக்க மாட்டார்கள் என நினைத்துள்ளார் தமிழ்மணி.
இதனை தனது நண்பர்களுக்கு தெரிவித்த தமிழ்மணி, கொள்ளையடிப்பதற்காக கடலூரில் திட்டமிட்டு சென்னைக்கு வந்து அரங்கேற்றியதாக தெரிவித்தார் டி.எஸ்.பி ரமேஷ்.
கைப்பற்றப்பட்டது ஹவாலா பணம் அல்ல என ஷூ கடை உரிமையாளர் அஸனின் வழக்கறிஞர் அசாரூதீன் தெரிவித்தார்.
4 மணி நேரத்தில் கொள்ளை கும்பலை பிடித்து 20 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்ததாக தெரிவித்த டி.எஸ்.பி ரமேஷ், பணத்தை வருமானவரித் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு படிப்பினை என போலீஸார் தெரிவித்தனர்.
Comments