மாணவி சுனிதா உயிரிழப்பு விவகாரம் : பள்ளிமுதல்வர் - 7 ஆசிரியர்கள் மீது வழக்கு..! டிசியை வாங்கிச் செல்ல தந்தையிடம் கூறியதால் மகள் விபரீத முடிவு
விழுப்புரம் அருகே, அரையாண்டு தேர்வில் பார்த்து எழுதியதாகவும், சரியாகப் படிக்காததால் டிசியை வாங்கிச் செல்லுமாறும் தந்தையிடம் பள்ளி ஆசிரியர்கள் கூறியதால் 12 ஆம் வகுப்பு மாணவி அவமானம் தாங்காமல் மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்ட நிலையில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் ராமகிருஷ்ணா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சுனிதாவின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..!
விழுப்புரம் அடுத்த காணையைச் சேர்ந்தவர் நேதாஜி. இவரது மகள் சுனிதா விழுப்புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி பள்ளியில் அரையாண்டு தேர்வு தமிழ் பாடத்தேர்வு நடந்தது. மாணவி சுனிதா தேர்வில் பிட் பேப்பர் பார்த்து எழுதியதாக பள்ளி தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி அவரது தந்தை நேதாஜிக்கு பள்ளியில் இருந்து போன் செய்து அவரை பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதன்படி மறுநாள் நேதாஜி தனது மகள் சுனிதாவுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரிடம் ஆசிரியர்கள் சிலர், உங்களது மகள் சரியாக படிப்பதில்லை, உங்கள் மகளால் எங்களுக்கு தேர்ச்சி சதவீதத்தை சரியாக காட்ட முடியாது, இனி உங்கள் மகளுக்கு இப்பள்ளியில் படிக்க இடம் கிடையாது, பள்ளி மாற்றுச் சான்றிதழை வாங்கிவிட்டு செல்லுங்கள் என்று திட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி சுனிதா, வியாழக்கிழமை காலை தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட தாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவியின் உடல், பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வோம் என்று பெற்றோர் கூறினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் சடலத்தை பெற்றுக் கொண்டனர்.
மாணவியின் தந்தை நேதாஜி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பள்ளி முதல்வர், 5 ஆசிரியைகள், 2 ஆசிரியர்கள் என 8 பேர் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments