ஓடும் காரில் படமெடுத்த பாம்பு... ஒரு மணி நேரம் போராடியும் தீயணைப்பு வீரர்களுக்கு டிமிக்கி..! கண்ணுக்கு தெரிஞ்ச பாம்பு ஓடியது எப்படி ?

0 1137

ஓடும் காரின் முன்பக்கம் படமெடுத்து ஆடிய  நாகப்பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்பு நிலையத்திற்கே கொண்டுச் சென்று காரை நிறுத்திய நிலையில் தீயணைப்பு வீரர்களிடம் பிடிபடாமல் பதுங்கிக் கொண்டதால், வேறு வழியின்றி பாம்புடனே காரை கிளப்பிக் கொண்டு புறப்பட்டனர்

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இளங்கோவன் தனது நண்பர்கள் 3 பேருடன் ஹூண்டாய் வெனியூ காரில் தஞ்சாவூருக்குச் சென்றுக் கொண்டிருந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சென்ற போது கார் என்ஜின் முன்பகுதியில் ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதை பார்த்த மற்ற வானக ஓட்டிகள் இதுகுறித்து இளங்கோவனிடம் தெரிவித்தனர்.

காரை நேரடியாக அப்பகுதியில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு ஓட்டிச் சென்று நிறுத்தினார் இளங்கோவன்.

காரில் பாம்பு இருப்பதாக இளங்கோவன் தெரிவிக்கவே, பாம்பு பிடிக்கும் உபகரணங்களுடன் தயாராகினர் தீயணைப்பு வீரர்கள். பேனட்டினை திறந்து என்ஜின் பகுதியில் தேடிப்பார்த்தால் அந்த பாம்போ அடிப்பகுதிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. ஒருவழியாக கிடைத்த இடைவெளியில் பாம்பை கண்டுபிடித்த தீயணைப்பு வீரர்கள் கவ்விப் பிடிக்கும் கருவி உதவியுடன் பாம்பின் ஒரு பகுதியை பிடித்தனர். ஆனாலும், அந்த பாம்பு நழுவி மீண்டும் என்ஜின் பகுதிக்குள் சென்று சுருண்டது.

பாம்பின் மீது மண்ணெண்ணெய் பீய்ச்சியடித்தால் வெளியே வந்து விடுமென நினைத்து அதனையும் செய்துப் பார்த்தும் பாம்பு மட்டும் வெளியே வரவேயில்லை.

ஒரு மணி நேரம் போக்கு காட்டி பிடிபடாமல் பதுங்கிக் கொண்டதால், வேறு வழியின்றி காரை பாம்புடனேயே திருப்பி அனுப்பி வைத்தனர் தீயணைப்புத் துறையினர். இதனால் வேறு வழியின்றி பயத்துடனேயே காரை ஓட்டிச் சென்றார் இளங்கோ.

சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்ததும், வடலூருக்குச் சென்ற இளங்கோ அங்கே காரை நிறுத்தி விட்டு டீ குடிக்கச் சென்றுள்ளார். இதற்குள் என்ஜின் சூடு பொறுக்க முடியாமல் பாம்பு தானாகவே காரை விட்டு கீழே இறங்கி ஓடி விட்டதாக தெரிவித்தார் இளங்கோ.

தற்போது மழைக்காலம் என்பதால் பாம்புகள் தங்களது இருப்பிடத்தை விட்டு சூடான இடங்களுக்கு இடம் பெறும், எனவே கார், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் கவனமுடன் இருக்க வேண்டுமென தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments