வீடு தேடி வரும் டோக்கன்... ஒரு நாளுக்கு 200 பேருக்கு வழங்க ரேஷன் கடைகளில் ஏற்பாடு..
புயல் நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகம் துவங்கியுள்ள நிலையில், நெரிசலை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 200 டோக்கன்களுக்கு மட்டுமே 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. குறித்த நாளில், நேரத்தில் சென்று நிவாரணத் தொகையை வாங்கிக் கொள்ளுமாறும் பொதுமக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு முழுமையாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக அரசு. டோக்கன்கள் மற்றும் நிவாரண தொகையை ரேசன் கடைகள் மூலமாக எப்படி விநியோகிக்க வேண்டும் என்பது குறித்து ரேஷன் கடை பணியாளர்கள் 500 பேருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிவாரண தொகை வழங்குவதை வரும் 17-ஆம் தேதி முதலமைச்சர் துவக்கி வைத்த பின்பு, முதல் நாள் காலையில் 50 பேருக்கும் மாலையில் 50 பேருக்கும் ரேசன் கடைகள் மூலமாக நிவாரண தொகை வழங்கப்படும். 18-ஆம் தேதியில் இருந்து தினந்தோறும் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் பணம் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிவாரணத் தொகை பெற ரேசன் கடைக்கு வரவேண்டிய நாள், நேரம் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டோக்கன் வழங்கும் பணியில் மூன்றாம் நபர்களை ஈடுபடுத்தாமல், ரேசன் கடை பணியாளர்களே நேரடியாக ஈடுபட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயை 12 ஐநூறு ரூபாய் நோட்டுகளாக குடும்ப அட்டைதாரர் முன்னிலையில் எண்ணி, உறை ஒன்றுக்குள் வைத்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷனில் பொருட்களை வாங்குவதைப் போலவே, நிவாரணத் தொகையை வழங்க பயோ மெட்ரிக் விரல் ரேகை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் விரல் ரேகை பதிவு செய்ய முடியாதவர்களிடம் தனியாக சுய விபரக்குறிப்பு மற்றும் ரேஷன் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு பணம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் தயாராக இருக்கும் விண்ணப்பங்களை பெற்று தகவல்களை நிரப்பி வழங்கலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments