மக்களவைக்குள் புகுந்து கலர் புகை குப்பிகள் வீச்சு..! 4 ஆண்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய 4 பேர் கைது..!
மக்களவையில் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் இளைஞர்கள் 2 பேர் திடீரென நுழைந்து புகை குப்பிகளை வீசினர். 4 ஆண்டுகள் திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை மொத்தம் 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சரியாக பிற்பகல் 1 மணி 1 நிமிடம்..! மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென குதித்து எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் நுழைந்தனர் 2 பேர்.
எம்.பி.க்களின் இருக்கை மீது ஏறி அங்கும் இங்கும் தாவிய அவர்கள் மஞ்சள் நிற புகை உமிழும் குப்பிகளை தூக்கி அவையில் வீசினர். அவைக் காவலர்கள் மற்றும் எம்.பி.க்கள் சேர்ந்து இந்த 2 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மக்களவையில் இருந்து உடனடியாக எம்.பி.க்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் வெளியே போக்குவரத்து பவனுக்கு எதிரில் 2 பேர் கலர் புகை உமிழும் குப்பிகளை வீசி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு ஆண் மற்றும் பெண் என இந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவங்களை அடுத்து நாடாளுமன்றம் மற்றும் இதைச் சுற்றியுள்ள சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சாலைகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் வாகன தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவைக்கு உள்ளேயும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வீசப்பட்ட கலர் புகை குப்பிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில், குப்பிகளில் இருந்தவை ஆபத்தில்லாத கலர் புகை மட்டுமே என்பது தெரியவந்தது.
பிடிபட்ட 4 பேரிடமும் பல்வேறு பாதுகாப்பு முகமைகளைச் சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தாங்கள் மொத்தம் 6 பேர் என்றும், படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 4 ஆண்டுகளாக திட்டமிட்டு, ஒத்திகை பார்த்து நாடாளுமன்றத்துக்குள் புகுந்தததாக குறிப்பிட்ட அவர்கள், 6 பேரும் அவைக்குள் செல்ல விரும்பியதாகவும், ஆனால் 2 பேருக்கு மட்டுமே பாஸ் கிடைத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, எஞ்சிய 2 பேரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்களவைக்குள் கலர் புகை குப்பியை வீசிய ஒருவர் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா. மற்றொருவர், மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் என்ற பொறியாளர். புத்தகப் புழுவான தனது மகன் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார் என்று தாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று தெரிவித்த மனோரஞ்சனின் தந்தை, தமது மகன் தவறு செய்திருந்தால் தூக்கில் போடப்பட வேண்டும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே பிடிபட்டவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அன்மோல் ஷின்டே மற்றும் ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த நீலம் தேவி ஆவர். வேலை இல்லா திண்டாட்டம் பற்றி கவலையுடன் பேசி வந்த தனது மகள் நீலம் இது போன்ற செயலில் ஈடுபடப் போகிறாள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று அவரது தாயார் குறிப்பிட்டார்.
கலர் புகை குப்பிகள் வீச்சை அடுத்து நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி பிரதான வாயிலை எம்.பி.க்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments