யாருக்கெல்லாம் நிவாரணம்... இந்த பாதிப்புகள் இருந்தால் நீங்களும் பெறலாம்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், மத்திய-மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை அட்டை வைத்திருப்போர் ரேசன் கடைகளில் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம் எனவும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என அரசாணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கும் செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களுக்கு முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமைக்கும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 கிராமங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என அரசாணை கூறியுள்ளது.
4 மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணி, பாத்திரம், வீட்டு உபயோக பொருட்களை இழந்தவர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டை வைத்திருப்போர் தங்களுக்கான பாதிப்பு விவரங்களை வங்கி கணக்கு விவரத்துடன் ரேசன் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் நிவாரண தொகைக்கான டோக்கன் கிடைக்கவில்லையோ அவர்கள் ரேசன் கடைகளுக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
Comments