21 பேர் நரபலி புதையல் ஆசைகாட்டி பூசாரி அரக்கத்தனம்..! 5 வருடங்களாக செய்த சம்பவம்

0 1378

புதையல் ஆசைக்காட்டி அழைத்துச் சென்று, நகை பணத்தை பறித்துக் கொண்டு 21 பேரை அடுத்தடுத்து கொலை செய்து புதைத்ததாக சீரியல் கில்லர் மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர், பரம்பரை நாட்டு வைத்தியர் வெங்கடேஷ். கடந்த அக்டோபர் மாதம், வேலை ஒன்றுக்காக நாகர் கர்னூலுக்கு செல்வதாகவும் 3 நாட்களில் வீடு திரும்புவதாகவும் மனைவியிடம் கூறிவிட்டு வெங்கடேஷ் ஊருக்கு சென்றதாக தெரிகிறது. சொன்னபடி 3 நாட்களில் திரும்பி வராததுடன், செல்ஃபோனும் அணைக்கப்பட்டதால் பதற்றமடைந்த வெங்கடேஷின் மனைவி, ஹைதராபாத் போலீசாரிடம் புகார் செய்தார்.

வெங்கடேஷ் மனைவி புகார் செய்த மறுநாள், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தின் அருகே ஆண் சடலம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அது வெங்கடேஷ் என்பது தெரியவந்ததை அடுத்து சுற்று வட்டார கிராமங்களில் போலீசார் விசாரணையை முடுக்கினர்.

நாட்டு வைத்தியர் வெங்கடேஷ், சில நாட்களுக்கு முன் நாகபூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியம் யாதவ் என்ற மந்திரவாதியை சந்திக்க சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மந்திரம், வசியம், பூஜைகள் போன்றவற்றில் தன்னை கைதேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு, புதையல் எடுத்துத் தருவதாக பலரை நம்பவைத்து பணம் நகைகளை பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர் சத்தியம் யாதவ் என்று நாகபூர் வாசிகள் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்தியம் யாதவை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

20 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 மகன்கள் உள்ள சத்தியம் யாதவை பிடித்து விசாரித்த போது, அவர் திடுக்கிட வைக்கும் பல உண்மைகளை தெரிவித்தாக போலீசார் கூறினர். சில மாதங்களுக்கு முன் தமக்கு அறிமுகமான வெங்கடேசனிடம் புதையல் எடுத்து கொடுக்கிறேன் வா என்று கூறி 2 கட்டங்களாக 10 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்ததாகவும், தொடர்ந்து புதையல் கேட்டு நெருக்கடி தந்ததால் வெங்கடேசனை கொலை செய்த புதைத்து விட்டதாகவும் சத்தியம் யாதவ் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 21 பேரை இதே போல புதையல் ஆசை காண்பித்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றதாகவும், பணம் இல்லாதவர்களிடம் அவருடைய நிலம், வீடு ஆகியவற்றை எழுதி வாங்கிக்கொண்டு கொலை செய்ததாகவும் சத்தியம் யாதவ் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்தியம் யாதவ் அடுத்தடுத்து கொலை செய்த 21 பேரில் 11 பேரை அடையாளம் கண்டுள்ள போலீசார் எஞ்சிய 10 பேர் யார் என்று கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் என்று போலி மந்திரவாதி சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி பணம் நகை, நிலம் ஆகியவற்றை பூஜை கட்டணமாக கொடுத்து 21 பேர் தங்கள் உயிரை விட்ட சம்பவம் தெலுங்கானா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments