இதுலயும் பணம் தான் குறியா..? அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலத்தை அள்ளிப்போட்ட பரிதாபம்..!

0 1286
இதுலயும் பணம் தான் குறியா..? அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலத்தை அள்ளிப்போட்ட பரிதாபம்..!

புளியந்தோப்பு பகுதியில் கழுத்தளவு வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணிக்கு, குழந்தை இறந்து பிறந்த நிலையில்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை கொடுக்காமல் பணம் கேட்டு அலைக்கழித்து இறுதியில் அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில் பிணவறை ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 

புளியந்தோப்பு கன்னிகாபுரம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மசூத் பாஷா. கர்ப்பிணியான இவரது மனைவி சோபியா' கடந்த 6-ம் தேதி கனமழை காரணமாக இவர்கள் வசித்த பகுதி முழுவதும் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்போது மதியம் 12 மணியளவில் சோபியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. 4-ம் தேதி காலையிலிருந்து செல்போன் சிக்னல் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் இவர்களால் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரிய அளவில் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால வேறு வழியின்றி சோபியாவையும் பிறந்த குழந்தையையும் மீன்பாடி வண்டியில் உயராமான பலகை போட்டு அதில் அமர வைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் படகு ஒன்றை வரவழைத்து புரசைவாக்கம் பேரக்ஸ் சாலை வரை படகில் தாயையும் பிறந்த குழந்தையையும் அனுப்பி வைத்துள்ளனர். அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் இறந்த குழந்தையை வைத்து விட்டு, தனது மனைவியை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் மசூத் பாஷா

பணத்துக்காக கடந்த ஐந்து நாட்களாகியும் தனது குழந்தையின் உடலை தன்னிடம் கொடுக்கவில்லை எனவும் இதனால் அடக்கம் செய்ய முடியாமல் தான் திண்டாடி வருவதாகவும் தெரிவித்த மசூத் பாஷா இதனால் தன்னால் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருந்து , அந்த பச்சிளம் குழந்தையின் உடலை துணி ஏதும் சுற்றாமல் பிரேத பரிசோதனை செய்யாமல், ரத்தம் தோய்ந்த உடலுடன் அட்டை பெட்டியில் அள்ளிப்போட்டு கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து அட்டைப் பெட்டியில் குழந்தையை வைத்து கொடுத்த விவகாரம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பிணவரை உதவியாளர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments